விழுப்புரம்: ஆட்டோவில் டிரைவர் அருகே அமர்ந்து அமைச்சர் மஸ்தான் பயணித்தது வைரலாகியுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி ஒருவர் உடல்நலக் குறைவால் தனது இல்லத்தில் உள்ளதை அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் இன்று காரில் சென்றார். அனந்தபுரம்வரை காரில் சென்ற அமைச்சர் அங்கிருந்து திமுக நிர்வாகி வெங்கடேசன் வீட்டிற்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஆட்டோ ஒன்றில் டிரைவருக்கு அருகே அமைச்சரும், பின் இருக்கையில் திமுகவினர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் பயணிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படத்தில் டிரைவர் அருகே அமர்ந்து செல்வது மோட்டார் வாகன சட்டப்படி தவறானது என விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அமைச்சரிடம் விளக்கம் பெற பலமுறை தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை.