நடிகர் கார்த்தியின் ’சர்தார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
முத்தையா இயக்கும் ’விருமன்’, பி.எஸ் மித்ரன் இயக்கும் ’சர்தார்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ளன. இதில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘விருமன்’ தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேபோல, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகமும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று ஏற்கனவே அறிவித்தது படக்குழு. இந்த நிலையில், கார்த்தி இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். வரும் தீபாவளையையொட்டி அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கார்த்தி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ‘சுல்தான்’ வெளியானது. அதற்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு ‘கைதி’, ‘தம்பி’ படங்கள் வெளியாகின. ஆனால், 2020 கார்த்தி படம் வெளியாகாத ஆண்டாகத்தான் இருந்தது. தற்போது, ’2022 என்னோடது’ என்று சொல்லும்படியாக மூன்று படங்களை இறக்குகிறார் கார்த்தி. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என ரசிகர்களுக்கு ட்ரிப்பிள் ட்ரீட் கொடுக்கிறார். இந்த ஆண்டு இப்படி ஒரே ஆண்டில் முன்னணி நடிகரின் மூன்று படங்கள் வெளியாவது விஜய் சேதுபதிக்கு அடுத்துக் கார்த்திக்குதான். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ விரைவில் வெளியாகவுள்ளது.