திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே குழந்தை இல்லை என்பதால் மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமியார் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கழுவங்காடு கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மற்றும் தஞ்சை மாவட்டம் துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி ஆகியோரது மணவிழா கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்றது.
இருவருக்கும் இடையே குழந்தை இல்லை என்பதன் காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21ந்தேதி மகேந்திரன் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் தனலட்சுமி வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாமியார் ரஞ்சிதம், நாத்தனார் மகன் விஜயராமன் ஆகியோர் தனலட்சுமியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டனர்.
மாமியார் ரஞ்சிதம் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் மருமகள் தனலட்சுமிக்கு 10வருடமாக குழந்தை இல்லை என்றும் இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மகன் வெளியூர் சென்ற சமயத்தில் பேரன் விஜயராமன் துணையோடு வீட்டில் உறங்கி கொண்டிருந்த தனலட்சுமியின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.