‘இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன்’: சேலத்தில் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சேலம்: சேலம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது என கூறியதுடன் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும், சொந்த ஊர் மக்களுக்கு முதலில் என்ன செய்தீர்கள்? என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சேலம் மாவட்டத்துக்குச் செய்த சாதனைகளைச் சொல்வதற்கே நேரம் போதாது. சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஓராண்டில் பயனடைந்தவர்களைப் பற்றி இப்போது சொல்கிறேன்.

முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 23,965 பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற 1.45 லட்சம் பேரின் 438கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

5.94 கோடி தடவைகள், பெண்கள் இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7.16 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.பால் விலைக் குறைப்பின் மூலமாக 2.75 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.

3963 பேர் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளார்கள்.10.19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண நிதி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் இதே ஆத்தூருக்கு வருகை தந்த நான் புதிதாஅக் 13 பணிகளைத் தொடங்கி வைத்தேன்.

அன்றைய தினமே மரவள்ளி விவசாயிகளுடனும் – ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினேன். சேகோசரில் கட்டப்பட்ட மின்னணு ஏலமையத்தையும் நேரடி விற்பனை முனையக் கட்டடத்தையும் திறந்து வைத்தேன். கடந்த டிசம்பர் மாதம் சேலத்துக்கு வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது ஆட்சியின் போது சேலம் மாவட்ட மக்களுக்காக செய்தவை பற்றி சுட்டிக்காட்டி பேசினார்.

“சேலத்தைச் சேர்ந்தவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். நான்கு ஆண்டுகள் இருந்தார். தேர்தலுக்கு முன்னதாக அவர் தொகுதிக்கும் சென்று கிராம சபைக் கூட்டத்தில் பங்கெடுத்தேன். அங்கே செல்வதற்கு முன்னதாக இந்த எடப்பாடி தொகுதியில் மட்டும் வேலை கேட்டு பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை எடுக்கச் சொன்னேன்.

சுமார் பத்தாயிரம் பேர் வேலைக்கான பதிவு செய்திருந்தார்கள். அவர்களுக்கு வேலை எதுவும் தரப்படவில்லை. அனைத்து விண்ணப்பங்களையும் கட்டுக்கட்டாக பிரிண்ட் எடுத்துச் சென்று அதே மக்களிடம் காட்டினேன். அத்தனை பேரின் வேலை வாய்ப்புக்காக ஒரு திட்டம் கூடத் தீட்டாதவர் தான் பழனிசாமி. முதலமைச்சரின் தொகுதியாக இருக்கிறது, இங்குள்ள மக்களிடம் பெரிய அளவில் புகார் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் இரண்டு மணிநேரம் பல்வேறு புகார்களை மக்கள் சொன்னார்கள். ‘ரோடு மட்டும் போடுறாங்க, அதுவும் போட்ட ரோட்டையே திரும்பத் திரும்ப போடுகிறார்கள்’ என்று பொதுமக்கள் புகார் சொன்னார்கள்.

எடப்பாடி தொகுதியில் ஜவுளிபூங்கா, நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம், கொங்கணபுரத்தில் தொழில்பேட்டை, மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு, எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு, கொங்கணபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம், மின் மயானங்கள், தேங்காய், மா.பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை, பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம், நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்

இந்த கோரிக்கைகள் எதையும் பழனிசாமி தனது சொந்தத் தொகுதிக்கு செய்து தரவில்லை. இன்றைக்கு தினந்தோறும் அவர் இந்த ஆட்சியைக் குறை சொல்லி அறிக்கை விடுகிறார். அறிக்கை விடக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் தான் ஆட்சியில் இருந்த காலத்தில் எதையாவது செய்துள்ளாரா என்றால் இல்லை.

அவரது ஆட்சியில் நடந்த சாதனைகள் என்பவை மூன்று தான்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை

 தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு

கொடநாடு கொலை- கொள்ளை இவை தான் அவரது ஆட்சியின் வேதனையான சாதனைகள்.

ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க அரசு செய்த சாதனைகள் என்பவை பத்தாண்டு காலத்தில் செய்யக் கூடிய அளவிலான சாதனைகள் ஆகும்.”

இவ்வாறு கூறினார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.