வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே மின்னல்வேகத்தில் சென்ற கார் மோதியதில் புது மாப்பிள்ளை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்தவர் முன்பக்க பேனட்டில் மாட்டிக் கொண்டதால் தப்பிய கருப்பு நிறக் கார் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது
வேலூரை சேர்ந்தவர் கார்த்திக் . இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணமானது. புது மாப்பிள்ளையானகார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் விரிஞ்சிபுரத்தில் பெங்களூர் – சென்னை நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற சரக்குவாகனத்தை முந்திச்செல்வதற்காக புயல்வேகத்தில் வந்த ஹோண்டா சிட்டி கருப்பு நிறக்கார் ஒன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் 10 அடி உயரத்துக்கு தூக்கிவீசப்பட்ட கார்த்திக் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கார்த்திக்கின் நண்பர் அந்த அதிவேக காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு பேணட்டில் சிக்கிக் கொண்டதால் அந்த கார் சிறிது தூரம் சென்று நின்றது.
இதையடுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அதிவேகத்தில் காரை ஓட்டிய விபத்தை ஏற்படுத்தியவர் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது. புதுச்சேரி பதிவு எண் கொண்ட அந்த காரை ஓட்டிச்சென்றது யார்? அந்த காருக்கு சொந்தகாரர் யார் ?என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்லும் ஆர்வத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் காரை இயக்குவதால் இது போன்ற விபரீத விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டும் போலீசார் விபத்து குறித்து விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.