ஈரான்
நாட்டின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அமீர் கபீர் தெருவில் அமைந்துள்ள இந்த 10 மாடி கட்டட விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பிற நகரங்களில் இருந்து அவசரகால குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், மோப்ப நாய்கள், ஹெலிகாப்டர்கள், மீட்பு வாகனங்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டட விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 32 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாடு ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவோடு வாழ பழகிக்கோங்க: பி.கே. ஓப்பன் டாக்
அதேசமயம், கட்டட இடிபாடுகளில் சுமார் 80 பேர் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 80 பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.