உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்பல்களைக் களமிறக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பார்லி போன்ற உணவுப்பொருட்களுக்காக பல ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் காத்துக்கொண்டிருக்க, ரஷ்ய போர்க்கப்பல்களோ, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து உணவு தானியங்கள் வெளியே வரமுடியாதபடி கருங்கடல் பகுதியில் தடையாக நின்றுகொண்டிருக்கின்றன.
அந்த போர்க்கப்பல்களை அங்கிருந்து அகற்றினால்தான் உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை வெளியே கொண்டு வரமுடியும்.
அப்படி உக்ரைனிலிருந்து வரும் உணவுப்பொருட்கள் உலகச் சந்தைக்கு வந்து சேராவிட்டால், அடுத்த 10 முதல் 12 மாதங்களில் உலகம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கும் என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தலைவரான David Beasley.
ஆக, உலகில் உணவுப் பிரச்சினையை உருவாக்கத் திட்டமிட்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக, குறிப்பாக, உக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் வெளியே வருவதற்கு தடையாக ரஷ்யா கருங்கடல் பகுதியில் நிறுத்தியுள்ள கப்பல்களிடமிருந்து, உணவு தானியங்களை வெளியே கொண்டு வரும் கப்பல்களுக்கு பாதுகாப்பதற்காக, அவற்றுடன் பயணிப்பதற்காக, போர்க்கப்பல்களை கருங்கடல் பகுதிக்கு அனுப்ப தனது நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.
அத்துடன், பிரித்தானியாவைப் போலவே அதன் கூட்டாளி நாடுகளும் சில அதிரடி திட்டங்களை வைத்துள்ளன.
அதாவது, உக்ரைன் துறைமுகத்திலிருந்து உணவுப் பொருட்களுடன் வெளியே வரும் கப்பல்களுக்கு பிரித்தானிய போர்க்கப்பல்கள் பாதுகாப்பு அளிக்க திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், ரஷ்யக் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில், போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய Harpoon வகை ராக்கெட்களையும் அவற்றை ஏவக்கூடிய கருவிகளையும் டென்மார்க் நாடு உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
ஆக, உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை வெளியே கொண்டு வந்து உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பிரித்தானியா, லிதுவேனியா, டென்மார்க் முதலான பல நாடுகள் கைகோர்த்துள்ளது, உணவு தானியங்களுக்காக காத்திருக்கும் நாடுகள் பலவற்றிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.