இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், போக்குவரத்து கட்டண திருத்தம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள 1044 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எந்தவிதமான எரிபொருள் வகைகளும் கிடைக்கவில்லை என்று அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர் புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லீற்றர் எரிபொருள் மாத்தறை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் இவ்வாறான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விற்பனைக்கு எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் சிலர் இருப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.