திருப்பூர்:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 38). இவரது மகன்கள் தர்னீஷ் (9), நித்திஷ் (6). முத்துமாரி தனது 2 மகன்களுடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அருகே வாவிபாளையம் சேடர்பாளையம் அரசு பள்ளி வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். இந்தநிலையில் நேற்று காலை முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களும் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் அபிநவ்குமார், அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் நல்லசாமி, திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பதுருன்னிசாபேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த முத்துமாரி மற்றும் 2 மகன்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களை கொன்ற மர்மநபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முத்துமாரியுடன் தங்கியிருந்து வந்த நபர் 3பேரையும் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. 3 பேரின் தலையை பிடித்து தரையில் மோதி அடித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து முத்துமாரியுடன் தங்கியிருந்த நபர் குறித்து வீட்டு உரிமையாளர் பத்மாவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பத்மாவதி கூறுகையில், 2பேரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே அது குறித்து முத்துமாரியிடம் கேட்டேன். அப்போது முத்துமாரி, நாங்கள் விரும்பி ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம் என்றும், எனது சொந்த ஊர் திருவாரூர் என்றும், மேலும் 1 மாதம் மட்டும் வாடகைக்கு வீடு கொடுக்குமாறும், அதன் பின்னர் வேறு இடத்திற்கு சென்று விடுவோம் என்றும் முத்துமாரியும், அந்த நபரும் கூறியதாக போலீசாரிடம் பத்மாவதி தெரிவித்தார்.
மேலும் முத்துமாரிக்கு திருவாரூர் அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருடன் ஏற்கனவே திருமணமான நிலையில் கணவர் மற்றும் 2 மகன்களுடன் திருவாரூரில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடங்களாக கணேசனும், முத்துமாரியும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். கணேசன் திருச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 2 வருடங்களாகியும் கணவன் தன்னை அழைத்து செல்லாததால் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து முத்துமாரி வேலைக்காக தனது 2 மகன்களுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்துள்ளார். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்துள்ளார்.
அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை அறிந்த வாலிபர் அதனை சாதகமாக்கி கொண்டு முத்துமாரியுடன் பழகியுள்ளார். அவர் ஆறுதலாக இருந்ததால் முத்துமாரியும் பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து அந்த நபர் வாடகைக்கு வீடு பார்த்து அங்கு முத்துமாரியையும், 2 மகன்களையும் தங்க வைத்துள்ளார். அந்த நபரும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதன் மூலம் முத்துமாரியுடன் தங்கி இருந்தது அவரது கள்ளக்காதலன் என்பது தெரியவந்துள்ளது.
முத்துமாரி, அவருடைய மகன்களை அந்த நபர் அதிக அளவில் வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளே வைத்துள்ளார். முத்துமாரியின் மகன்கள் வெளியில் விளையாடும்போது அவர்களை அந்த நபர் அடித்து உள்ளே அழைத்து சென்று விடுவார் என்றும் கூறப்படுகிறது.
கொலையில் ஈடுபட்ட முத்துமாரியின் கள்ளக்காதலன் அந்த பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலும், ஒரு பனியன் நிறுவனத்திலும் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். வேலை பார்த்த இடங்களில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் கார்த்தி என்று கூறியதாக தெரிகிறது. அவர் இந்தி கலந்த தமிழ் பேசியதால் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வருகின்றனர். கொலையாளியை பிடித்தால் மட்டுமே கொலைக்கான காரணம்தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். வேலை தேடி திருப்பூர் வந்த பெண்ணையும் அவரது 2 மகன்களையும் கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களை கொன்ற கொலையாளி அங்கிருந்து சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் கொலையாளி தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருக்க எப்போதும் தலையில் தொப்பியும், முக கவசமும் அணிந்துள்ளார். சி.சி.டி.வி. கேமரா மூலம் கொலையாளியின் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.