சென்னை: ”கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது” என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சையளிப்பது குறித்து மருத்துவர்களுக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது 87 பேர் மட்டுமே டெங்கு பாதித்து சிகிச்சையில் உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பரவலாக இருந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் தொற்று பரவியுள்ளது.
ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகைகள் உள்ளது. எனவே, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு மிக அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 97% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 81% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 43.96 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
அடையாறு, தேனாம்பேட்டை பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல், கவனமுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.