கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்த ஏஐசிடிஇ பரிந்துரை… என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?!

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இயங்கும் தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்திடம் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகாரம் பெறவேண்டும். அதன்படி, தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடத்திட்டம், கல்விக் கட்டணம், சேர்க்கை விகிதம், ஆசிரியர்களுக்கான கல்வித் தரம், ஊதியம் உள்ளிட்டவற்றை ஏ.ஐ.சி.டி.இ நிர்ணயம் செய்யும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கல்விக் கட்டண நிர்ணயம் குழு பரிந்துரை செய்த கட்டணத்தையே கல்லூரிகள் பெறவேண்டும்.

அண்ணா பல்கலை கழகம்

கூடுதல் கட்டண புகார்களை இந்த குழு விசாரிக்கும். முன்னதாக, 2015-ம் ஆண்டில் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குக் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

இந்தக்குழு தனது அறிக்கையில், உட்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்கள் ஊதியம், பராமரிப்பு செலவினங்கள் அடிப்படையில்தான் கல்விக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அதன்படி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான அதிகபட்ச கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.1.44 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை இருக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்தது. இதற்குத் தமிழ்நாடு, தெலங்கானா உட்பட மாநிலங்கள் தனியார் கல்லூரிகளுக்குக் குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதையேற்று கல்விக்கட்டணத்தை மறுவரையறை செய்வதற்காக 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் தேசிய கட்டணக் குழுவை ஏஐசிடிஇ கடந்த ஆண்டு அமைத்தது. அந்தக்குழு தற்போது தனது பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம், ஆசிரியர்களின் ஊதியம், கல்லூரிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

கல்வி கட்டணம்

அதன்படி, பாலிடெக்னிக் பட்டப்படிப்புகளுக்கு (3 ஆண்டு)குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.67,900, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 40,900 ஆண்டு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யுஜி இன்ஜினியரிங்-க்கு (4 ஆண்டு) குறைந்தது ரூ.79,600, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 89,800-ம், பிஜி இன்ஜினியரிங்-க்கு ( 2 ஆண்டு) குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 41,200, அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 4,000-ம், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கல்விக் கட்டணம் சுமார் 30 சதவிகிதம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதவிர ஓட்டல் மேலாண்மையில் 3 ஆண்டு பட்டயப் படிப்புக்கு ரூ.67,900 முதல் ரூ.1 லட்சத்து 47,800 வரையும், 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு ரூ.81,300 முதல் ரூ.1 லட்சத்து 91,200-ம், 2 ஆண்டு முதுநிலை படிப்புக்கு ரூ.1 லட்சத்து 83,400 முதல் ரூ.3 லட்சத்து 78,400 வரையும் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம். மேலும், எம்சிஏ படிப்புக்குக் குறைந்தபட்சம் ரூ.88,500, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 94,100, எம்பிஏ படிப்புக்கு ரூ.85,000 முதல் ரூ.1 லட்சத்து 95,200 வரையும் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன்படி உதவி பேராசிரியர்களுக்கு ரூ.57,700 முதல் ரூ.1 லட்சத்து 37,000 வரையும், பேராசிரியர்களுக்கு ரூ.1 லட்சத்து 44,200 முதல் ரூ.2 லட்சத்து 60,000 வரையும் ஊதியம் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி கட்டணத்தைக் கல்லூரிகள் குறைக்கக்கூடாது. சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தத் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

college students (representational image)

தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது இன்பச் செய்தி என்றாலும், மாணவர்களுக்கும், பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ள நிலையில், கல்விக் கட்டண நிர்ணயக்குழு உள்ள தமிழ்நாட்டுக்குப் பொருந்துமா என்று கேள்வி எழுந்துள்ளது

இதுகுறித்து உயர்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, “தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்த கடந்த கல்வியாண்டிலே முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பினால் அதனை அமல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கல்வி கட்டணத்தை உயர்த்த ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி தமிழக அரசின் கட்டண நிர்ணயக்குழு விரைவில் புதிய கல்விக்கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிடும். இது வரும் கல்வியாண்டு முதல் அமலாகும்” என்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம்

இதுகுறித்து பேராசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, “அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் கல்லூரி ஆசிரியர்களில் பலருக்கும் இன்னும் முந்தைய பரிந்துரையின் படியே சம்பளம் வழங்கப்படவில்லை. அதனை அரசு, ஏ.ஐ.சி.டி.இ-யும் கண்டு கொள்ளவில்லை. தற்போது ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரைகளைத் தமிழக அரசு அமல்படுத்தினால், மாணவர்களின் கல்வி கட்டணம் உயருமே தவிர, தனியார் கல்லூரிகள் ஆசிரியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தாது. ஏற்கனவே, இளநிலை பட்டப்படிப்பு படித்தால், பிஎச்டி படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வி கட்டண உயர்வினால் முதுநிலை பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் சரிவைச் சந்திக்கும். குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் தங்களின் பிள்ளைகளை இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க வைக்கவே முடியாத நிலை ஏற்படும். இது ஏழை மக்களின் கனவை நொறுக்கும் அறிவிப்பாகும். ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரைக்கும் கட்டணத்தை அப்படியே அமல்படுத்துவார்கள் என்றால், இங்கு இருக்கும் கல்விக் கட்டண நிர்ணய குழு எதற்காக உள்ளது? அதற்கு ஊழியர்கள் எதற்கு?. எனவே, இதனைத் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது” என்றனர் ஆதங்கத்துடன்…

அமைச்சர் பொன்முடி

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வாபஸ் பெறுவதாக அறிவித்தார் மேலும், கல்வி கட்டணம் உயராது என்று நம்பிக்கை கொடுத்தார்.

கல்வி கட்டணத்தை உயர்த்த கூடாது என்பதே ஓட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பு… தமிழ்நாட்டில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.