சேலம்: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக இன்று (24-ம் தேதி) மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்று மாலை சேலம் வந்த முதல்வருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும். குறிப்பாக அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும். அதேநேரம் அணையின் நீர்இருப்பை பொறுத்து நீர் திறப்பு தேதி மாறுபடும்.
அணை வரலாற்றில் கடந்த 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 முறை ஜூன் 12-ம் தேதிக்கு முன்னர் நீர் திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கடந்த 1947-ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது.
நடப்பாண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், முன்கூட்டியே இன்று (24-ம் தேதி) காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தில் மதியம் 2 மணிக்கு நடக்கும், ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று பேசுகிறார்.
நீர்மட்டம் 117 அடியானது
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,074 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 12,777 அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 116.88 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 117.28 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 89.19 டிஎம்சி-யாக உள்ளது.
வழக்கத்தைவிட இந்தாண்டில் முன்கூட்டியே டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதால், குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வரவேற்பு
மேட்டூர் மற்றும் ஆத்தூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பூங்கொத்துக் கொடுத்து ஆட்சியர் கார்மேகம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வந்திருந்தார்.
பின்னர் கார் மூலம் மேட்டூர் புறப்பட்ட முதல்வருக்கு தீவட்டிப்பட்டியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையிலும், மேச்சேரி பேருந்து நிலையம் அருகே மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மேட்டூர் சென்ற முதல்வர் இரவு அங்கு தங்கினார். இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முதல்வர் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.