'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம்
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பல நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்பட உலகில் இருந்தும் பல நடிகர்கள், படைப்பாளிகள் கேன்ஸ் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. மொத்தம் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் முழுதும் ஒரே 'ஷாட்'டில் எடுத்து முடிக்கப்பட்டது.
இதற்காக, 64 ஏக்கர் நிலத்தில் 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் கேன்ஸ் விழாவில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. 'நான்லீனியர்' எனப்படும், சம்பவங்கள் முன் பின் மாறி, மாறி நிகழும் திரைக்கதையை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளதை கண்டு சர்வதேச திரைக்கலைஞர்கள் திகைத்து, ஆச்சரியம் அடைந்தனர். இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.