புதுடெல்லி:
ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய நாளில் ஏராளமான பொது மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை. இந்த ஆண்டு 75-வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதையொட்டி யோகான தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகான தினத்தின் போது பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
இது தவிர ஜூன் 21-ந்தேதியில் இருந்து 25 நாள் முன்பாகவே சர்வதேச யோகா தின ‘கவுன்டவுன்’ தொடங்குகிறது. இதன்படி வருகிற 27-ந்தேதி ஐதராபாத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
யோகா தினத்தின் போது பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா தொடர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், யோகாசன நிபுணர்கள், ஆர்வலர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் மேலும் உயர்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.