சாதி மறுப்பு திருமண தம்பதிக்கு தடை? ஆர்.டி.ஓ விசாரணைக்கு தஞ்சை ஆட்சியர் உத்தரவு

Inter caste marriage results in social boycott; Thanjavur collector order probe by DRO: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் தனது ஊராட்சியைச் சேர்ந்த மேல்குடி சமூகத்தினர் கோயில் திருவிழா உள்ளிட்ட எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் தனது குடும்பத்தினரை அழைக்காமல் புறக்கணிப்பதாக தஞ்சாவூர் அருகேயுள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நேரில் வந்து மனு கொடுத்தார். இதனையடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி ஊராட்சி வையாபுரி பட்டியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரகுமார் (38). ஆய்வகங்களுக்கு மூலப்பொருள்கள் சப்ளை செய்யும் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாக திருச்சியில் பணிபுரிந்து வருகிறார். பக்கத்து கிராமமான தொண்டராயன்பாடியைச் சேர்ந்தவர் பொம்மியம்மாள் (32). எம்.ஏ. பட்டதாரி. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இவ்விருவரும் காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு ‘சாதி மறுப்புத் திருமணம்’ செய்து கொண்டனர். அத்திருமணத்தை முறைப்படி பதிவும் செய்துள்ளனர். இவர்களுக்கு அதியமான் தமிழன் (11) என்ற மகனும், அனு வேலுநாச்சியார் (9) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், “சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் எங்களது குடும்பத்தினரை கோயில் திருவிழா உள்ளிட்ட எந்தவொரு சுப காரியத்திற்கும் அழைக்காமல் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மேல்குடி சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்,” என்கிறார் சந்துரு.

“சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதேபோல எனது குடும்பத்தினரை கோயில் திருவிழா உள்ளிட்ட எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் அழைக்காமல் புறக்கணித்து வந்தனர். அதுகுறித்து நான் பூதலூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். அதைத் தொடர்ந்து, எதிர் தரப்பினரை போலீஸார் அழைத்து கண்டித்தனர். அதன் பின்னர், மூன்று ஆண்டுகளாக கோயில் திருவிழாவிற்கு எங்களையும் அழைத்தனர். அதற்கான வரியையும் முறைப்படி எங்கள் குடும்பத்தில் வசூலித்தனர்.

இதையும் படியுங்கள்: வேக வேகமாக தூர்வாரும் பணிகள்: மே 27-ம் தேதி கல்லணை திறப்பு உறுதி!

இந்நிலையில் வெண்டையம்பட்டி ஊராட்சியில் இந்த ஆண்டுக்கான காளியம்மன் கோயில் திருவிழா கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று நேற்று முடிவடைந்தது. அத்திருவிழாவிற்கு எனது கிராமத்தைச் சேர்ந்த மற்ற குடும்பத்தினரிடம் மறைமுகமாக வரி வசூல் செய்துள்ளனர். ஆனால் எனது குடும்பத்தில் மட்டும் வரி வசூல் செய்யாமல் எங்களைப் புறக்கணித்து விட்டனர். இது தீண்டாமைச் செயல் ஆகும்,” என்கிறார் சந்துரு.

அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தஞ்சாவூர் ஆர்டிஓவுக்கு (வருவாய்க் கோட்டாட்சியருக்கு) உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.