பாட்டியாலா,-பஞ்சாபின் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்.,கின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, உடல் பரிசோதனைக்காக பாட்டியாலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பஞ்சாபில், 1988ல் நடந்த தெரு சண்டையில், நவ்ஜோத் சிங் சித்து, ஒருவர் முகத்தில் குத்தியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சித்து கடந்த வாரம் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய வழக்கறிஞர் எச்.பி.எஸ்.வர்மா கூறியதாவது:சிறையில் தனக்கு சிறப்பு உணவு வழங்கும்படி, சித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கோரிக்கை குறித்து பரிசீலித்த சிறை அதிகாரிகள், மருத்துவப் பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர். இதன்படி, சித்து போலீஸ் பாதுகாப்புடன் பாட்டியாலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மருத்துவர் குழு பரிசோதித்து அளிக்கும் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement