கேரளாவில் அண்மையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) பேரணியின் போது இந்துக்களுக்கு எதிரான கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிஎஃப்ஐ அமைப்பின் சார்பில் கடந்த வாரம் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். அப்போது பேரணியில் கலந்து கொண்ட ஒருவரின் தோளின் மீது அமர்ந்திருந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுவன், இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக கோஷம் எழுப்பினான். மிகுந்த வெறுப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் அந்த கோஷம் இருந்தது.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்ற போது, நீதிபதி கோபிநாத் மிகுந்த வருத்தத்தை பதிவு செய்தார். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதேபோல, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு கேரள காவல்துறையை வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், வெறுப்பு கோஷத்தை எழுப்பிய சிறுவனை தூக்கி வந்த நபரை போலீஸார் அடையாளம் கண்டனர். இதில் அவர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த அன்சார் நசீப் என்பதும், அவர் அந்த சிறுவனின் உறவினர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஆலப்புழா மாவட்ட பிஎஃப்ஐ தலைவர் நவாஸ் வந்தனம், மாவட்ட செயலாளர் முஜீப் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM