டோக்கியோ: அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இன்று (செவ்வாய்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோபைடனை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனிலும், அதன் பின்னர் ஜி-20, சி ஓபி 26 உச்சி மாநாடுகளிலும் இருதலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சமீபத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி இரு தலைவர்களும் காணொலி மூலமாக கலந்துரையாடினர்.
இன்றைய சந்திப்பின் போது, இந்தியா – அமெரிக்கா விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையானது ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு வகை செய்கிறது. இருதரப்பு விஷயத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தியாவில் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைத்துறைகளில் தொடர்ந்து முதலீட்டு ஆதரவை வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதிக்கழகம் உதவும் வகையிலான முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இந்தியா – அமெரிக்கா இடையே பயன் சார்ந்த ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு முக்கியமான, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முன்முயற்சியை (ஐசிஇடி) இருதரப்பும் தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இணை தலைமையில், செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டிங், 5ஜி, 6ஜி, பயோடெக், விண்வெளி மற்றும் செமிகண்டக்டர்கள் போன்றவற்றை இரு நாடுகளின் அரசு, கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பயன்படுத்த ஐசிஇடி நெருக்கமான தொடர்பை உருவாக்கும்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவில் முக்கிய தூண் என்று குறிப்பிட்டு, இரு தரப்பினரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்தச் சூழலில், ‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சார்பு இந்தியா அல்லது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் தன்னிறைவு இந்தியா திட்டங்களின் கீழ், இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் கூட்டு சேருமாறு அமெரிக்க தொழில்துறைக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அதேபோல சுகாதாரத் துறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல, தடுப்பூசிகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை உருவாக்க வகைசெய்யும் கூட்டு உயிரி மருத்துவ ஆராய்ச்சியைத் தொடரும் வகையில், இந்தியாவும் அமெரிக்காவும் நீண்டகால தடுப்பூசி செயல் திட்டத்தை (விஏபி) 2027 வரை நீட்டித்துள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான மக்களிடம் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு, பரஸ்பர நன்மை பயக்கும் உயர்கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் அழைப்பு விடுத்தார்.
மேலும், தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட பார்வையை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
முன்னேற்றத்திற்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) தொடக்கத்தை வரவேற்ற பிரதமர், அந்தந்த தேசிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மற்றும் உள்ளடக்கிய ஐபிஇஎஃப்-ஐ வடிவமைக்க அனைத்து கூட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தலைவர்கள் தங்களின் பயனுள்ள உரையாடலைத் தொடரவும், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை உயர்மட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்கான தங்களது தொலைநோக்கை தொடரவும் ஒப்புக்கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியது: “உங்களை சந்திப்பதில் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் மற்றொரு ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் ஒன்றாக பங்கேற்றோம். இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு உண்மையிலேயே நம்பிக்கையின் கூட்டுறவாகும்.
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட விழுமியங்களும், பொதுவான நலன்களும், இந்த நம்பிக்கையின் பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது. நமது மக்களுக்கிடையிலான உறவுகள், நெருங்கிய பொருளாதார உறவுகள் ஆகியவையும் நமது கூட்டாண்மையை தனித்துவமாக்கியுள்ளது.
நமக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு, நமது ஆற்றலுக்கு இன்னும் கீழே உள்ளபோதிலும், அவை தொடர்ந்து விரிவாகி வருகிறது. நமக்கிடையிலான இந்தியா-அமெரிக்கா முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தின் மூலம், முதலீட்டு திசையின் வலுவான முன்னேற்றத்தை நாம் நிச்சயம் காண்போம் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
தொழில்நுட்பத்துறையில் நாம் நமது இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம். அதே போல உலக விஷயங்கள் குறித்தும் பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.
இந்தோ – பசிபிக் பிராந்தியம் குறித்து ஒரே விதமான கண்ணோட்டத்தை நமது இருநாடுகளும் பகிர்ந்துள்ளன. இருதரப்பு அளவில் மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துடைய பிற நாடுகளுடனும், நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட விழுமியங்கள் மற்றும் பொதுவான நலன்களை பாதுகாக்க நாம் உழைத்து வருகிறோம். குவாட் மற்றும் ஐபிஇஎஃப் நேற்று அறிவித்தவை இதற்கு உதாரணங்களாகும். இன்று நமது விவாதம், இந்த ஆக்கப்பூர்வமான உத்வேகத்தை பெரும் வேகத்துடன் கொண்டுசெல்ல உதவும்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு உலக அமைதி, பூமிக்கோளின் நிலைத்தன்மை, மனிதகுலத்தின் நலன் ஆகியவற்றுக்கு சிறந்த ஆற்றலுடன் தொடரும் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது” என்றார் பிரதமர் மோடி.