டோக்கியோ: குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அவர் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று (செவ்வாய்கிழமை) ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடனான சந்திப்பின்போது, 2021-ம் ஆண்டில் வாஷிங்டனில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் அவர் சந்தித்து பேசியதை நினைவு கூர்ந்தனர். இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்த யோஷிஹிடே சுகா அளித்த பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இருநாடுகளும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக அல்பானீசுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வர்த்தகம், தொழில் முதலீடு, பாதுகாப்பு, உற்பத்தி, அறிவியல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் பன்முக ஒத்துழைப்புகள் தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், இருநாடுகளிடையேயான உறவில் நேர்மறையான வேகத்தை தொடர இருநாட்டு தலைவர்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து விரைவில் இந்தியாவுக்கு வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.