புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததிலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அதற்கு உண்டான நிதியை போலி நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததிலும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி ஹேமந்த் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஹேமந்த் சோரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு உகந்தது தானா? என்று முதலில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கலாம்,’ என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.