ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ ஜூனியர் விகடனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்திருக்கிறது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தின் புகாரை ஜூனியர் விகடன் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விகடன் வழக்கறிஞர் விரிவாக விளக்கமளித்திருக்கிறார். இந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்தப் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் ஜூ.வி மீதான வழக்கு பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்தப் பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள், “பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான காவல்துறையின் இந்த அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது. பத்திரிகை சுதந்திரத்தின் தர வரிசையில் இந்தியா பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கும், பத்திரிகை சுதந்திரத்துக்கும் எதிரானது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, வழக்கிலிருந்து பத்திரிகையாளர்களையும், ஜூனியர் விகடன் பத்திரிகை நிறுவனத்தையும் விடுவிக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.