சி.பா.ஆதித்தனாரின் 41-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு பத்திரிகை மீது போடப்பட்ட வழக்கு என இதைப் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த ஊடகங்கள், பத்திரிகைகள் மீது தொடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். இது ஒரு மோசமான, பழிவாங்கும் போக்கு. இவர்கள் சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. கருத்துச் சுதந்திரம் என்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது வாய்கிழியப் பேசினார்கள். இப்போது இவர்கள் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் உள்ளதா?
இந்த ஆட்சி குறித்தும், இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்தும், எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து நான் பேசிவருவதால் என் மீது அடுக்கடுக்கான வழக்குகள். நான்கு வழக்குகளில் 28 பிரிவுகள் போடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்தால், அதனைச் சகித்துக்கொள்ளாமல் அவர்கள் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். இப்போது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடிப்பதுபோல தற்போது ஊடகங்கள் மீது வந்துள்ளார்கள். விகடனுக்கு மட்டுமல்ல, அனைத்து ஊடகங்களுக்கும் மிரட்டல் இது. காவல்துறையில் ஒரு அறிக்கைத் தருகிறார்கள்.
அதில் கடைசி வரியில் ஜி ஸ்கொயரைப் பற்றி இனிமேல் யாராவது விமர்சனம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். காவல்துறை யாருக்கு பி.ஆர்.ஒ வேலை செய்கிறது. ஜி ஸ்கொயர்க்கு பி.ஆர்.ஓ வேலை செய்கிறது. அம்மா காலத்தில் ஸ்காட்லாண்டு யார்ட் போலீஸ் போல இருந்த காவல்துறை இன்றைக்கு இந்த நிலைமையில் உள்ளது. காக்கி சட்டை என்றால் ஒரு கௌரவம் இருந்தது. இன்றைக்குக் காக்கி சட்டைக்கு அரசு சம்பளம் தருகிறதா, ஜி ஸ்கொயர் தருகிறதா. ஜி ஸ்கொயரைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்று காவல்துறை தெரிவிக்கிறது. காவல்துறை வேலையா இது. பொதுவாகத் தவறான செய்தியை வெளியிட்டால் அவதூறு வழக்குப் போடுவார்கள். இதுதான் நடைமுறை. ஒரு பத்திரிக்கையை மிரட்டும் வகையில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அவர்களைக் குற்றவாளிகள் போல் ஆக்குவது என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.
இது எல்லோருக்குமே அச்சுறுத்தல். தமிழகத்தில் யாரும் வாயைத் திறக்கக்கூடாது. எதிர்க்கட்சிகள் வாய் திறக்கக்கூடாது. பத்திரிகைகள் வாய் திறக்கக்கூடாது. இம் என்றால் வன வாசம். ஏன் என்றால் சிறை வாசம். பேசினால் சிறை. எழுதினால் சிறைதான். அரசின் அவல நிலையை எடுத்துப் போட்டால் சிறைதான். எனவே நீங்கள் அனைவரும் சிறைக்குப் போகத் தயாராகி விடுங்கள். இதுதான் இந்த ஆட்சியில் நடக்கப்போகிறது. ஒரு புகார் வருகிறது என்றால் அந்தப் புகாரை விசாரணை செய்து, எது உண்மை, எது பொய் என்று அலசிப்பார்த்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில்தான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவேண்டும்.
ஒரு புகாரை எழுதி வாங்கிக் கொண்டு, அதன் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், ஜனநாயக விரோத ஆட்சி, சட்டத்தை மீறிய ஆட்சி நடைபெறுகிறது. அரசினுடைய தீய எண்ணங்கள் வெளிப்பட்டுள்ளது. பத்திரிகைத் துறையை ஒடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒடுக்கவேண்டும். முழுக்க, முழுக்க காவல்துறை ஒரு ஏவல்துறையாக மாற்றிச் செயல்படுவது என்பது கண்டனத்திற்குரிய, தமிழகம் வெட்கி தலை குனியக்கூடிய, வேதனைப்படக்கூடிய விஷயமாகத்தான் இதைக் கருத முடியும். கழக ஆட்சியில் அவதூறு வழக்குப் போடுவார்கள். ஆனால் தற்போது ஒரு கிரிமினல் குற்றவாளிபோல் வழக்கு பதிவு செய்வது வரலாற்றிலே இதுதான் முதல் முறை.
இன்றைக்குக்கூட எதிர்க்கட்சித் தலைவர் சென்னையில் 20 நாள்களில் 18 கொலைகள் நடந்துள்ளன என்று அறிக்கை அளித்துள்ளார். இது தலை நகரா. கொலை நகரா. இப்படித்தான் சென்னை இன்றைக்கு மாறிவிட்டது. அடிப்படை கட்டமைப்பு வசதியில் தோல்வி. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வி. இந்த இரண்டைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்குச் சரியான பாதுகாப்பு இல்லை. பட்ட பகலில் கொலை, ரௌடிகள் ராஜ்யம். ஆளும் கட்சியின் அராஜகம். தலைநகரம் கொலை நகரமாக மாறியுள்ளதுதான் இன்றைக்குத் தமிழகத்தின் நிலை” என்று தெரிவித்தார்.