புதுடெல்லி: பஞ்சாப்பில் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட சுகாதாரத் துறை அமைச்சரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்த முதல்வர் பகவந்த் மான், அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தார். பஞ்சாப்பில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் எம்பி.யாக இருந்த பகவந்த் மான், முதல்வராக பதவியேற்றார். ஊழலுக்கு எதிராக இவர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவருடைய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக விஜய் சிங்லா இருந்தார். இவர் தனது துறையில் விடப்படும் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்பதாக, பகவந்த் மானுக்கு புகார்கள் சென்றன. இது பற்றி ரகசியமாக விசாரணை நடத்தி உறுதி செய்து கொண்ட பகவந்த், அமைச்சர் சிங்லாவை நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். பகவந்த்தின் உத்தரவை ஏற்று சிங்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நிமிடம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.முதல்வர் பகவந்த் மானின் இந்த அதிரடி நடவடிக்கை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் பற்றி பகவந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க அமைச்சர் விஜய் சிங்லா ஒரு சதவீதம் கமிஷன் கேட்பதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது பற்றி யாருக்கும் தெரியாது. நான் விரும்பி இருந்தால், இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்து இருப்பேன். ஆனால், பஞ்சாப் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை அது தகர்த்ததாகி விடும். ஒரு சதவீத ஊழலை கூட என்னாள் சகித்து கொள்ள முடியாது. ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்து உள்ளனர். அதை காப்பாற்ற நினைக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற மகனையும், பகவந்த் மான் போன்ற வீரனையும் இந்திய தாய் கொண்டிருக்கும் வரையில், ஊழலுக்கு எதிரான மாபெரும் போர் தொடரும்…’ என உணர்ச்சிமயமாக பேசியுள்ளார்.பகவந்த் மானின் இந்த அதிரடி நடவடிக்கையை ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பாராட்டி உள்ளனர்.கண்ணீர் பெருகுகிறது…பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் அதிரடி நடவடிக்கையால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் அடைந்துள்ளார். பகவந்த் மானின் வீடியோ உரையை இணைத்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பகவந்த்… உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். உங்களின் இந்த நடவடிக்கை, என் கண்களில் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்துள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவும், ஆம் ஆத்மியை நினைத்து பெருமிதம் கொள்கிறது,’ என்று தெரிவித்துள்ளார்.