தஞ்சாவூர்: சோழர் கால கோயில் குளம் தூர்வாரும் பணி; எட்டுச் சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரின் நகரப்பகுதியில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1400 ஆண்டுகள் பழைமையான கோயில் குளம் தூர்வாரப்பட்ட போது எட்டுச் சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், குளத்தை அகழாய்வு செய்தால் பழைமையான சிற்பங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பிருப்பதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோயில் குளம் மற்றும் உறைகிணறு

தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தை பகுதியில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழைமையான, பிரசித்தி பெற்ற கருணாசுவாமி என அழைக்கப்படுகிற வசிஷ்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் கிழக்குப் பகுதியில் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் சூரிய புஷ்கரணி என்ற தீர்த்த குளம் அமைந்துள்ளது. சோழ மன்னன் கரிகால சோழன் இக்கோயிலில் வழிப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கோயில் குளத்திற்குக் காவிரியின் கிளை ஆறான வடவாற்றிலிருந்து தண்ணீர் வந்து நிரம்பும் வகையில் நீர் வழி சுரங்கப்பாதையும் சோழர்கள் ஆட்சிக் காலத்திலேயே அமைக்கப்படிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இக்கோயில் குளம் பராமரிக்கப்படாமல் பல வருடங்களாக சிதிலமடைந்து புதர் மண்டிக் கிடந்தது.

உறைகிணறு

இதனைத் தொடர்ந்து சிவனடியார் செல்வபெருமாள் தலைமையில் சமூக ஆர்வலர்கள் பலர் குளத்தைத் தூய்மைப் படுத்தும் பணியைச் செய்தனர். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வடவாற்றிலிருந்து குளத்திற்கு நீர் வழிச் சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்து நீர் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டனர். பல்வேறு சவால்கள், ஆபத்துகளைக் கடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு நீர் வழிப்பாதை முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு, குளத்திற்குத் தண்ணீரும் கொண்டுவரப்பட்டது.

இப்பணியினைச் செய்த செல்வபெருமாளைப் பலரும் பாராட்டினர். இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளத்தைச் சுற்றி நான்கு கரையிலும் நடைபாதையுடன் கூடிய வகையில் குளத்தைத் தூர்வாரி மறு சீரமைப்பு செய்ய ரூ 2.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக அதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன.

உறைகிணற்றில் தண்ணீர்

ஜே.சி.பி இயந்திரம் கொண்டு குளம் தூர்வாரப்பட்ட போது குழி போன்று தென்பட்டுள்ளது. இதையடுத்து முழுமையாக அந்த இடத்தைச் சுத்தம் செய்து பார்த்ததில் சுடுமண் கிணறு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மொத்தம் எட்டு உறைகிணறுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் இரண்டரை அடி அகலம் கொண்டதாக அந்தக் கிணறுகள் உள்ளன.

இதுகுறித்துச் செல்வபெருமாளிடம் பேசினோம். “சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிறப்புமிக்க இந்தக் குளம் தூர்வாரும் போது சுடுமண்ணால் அமைக்கப்பட்ட எட்டு உறைகிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கூடுதலாக, கிணறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கும்பகோணம் மகாமகக் குளம், ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தகிணறு போன்றவற்றின் அமைப்பைப் போன்றே இந்தக் குளத்திற்குள் இருக்கும் உறைகிணறுகள் அமைந்துள்ளன. அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உறை கிணறுகளைப் பார்வையிட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

செல்வபெருமாள்

இதுகுறித்துத் தொல்லியல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர், “நீர் நிலைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்துச் சோழர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அதே போல் குளம், ஆறு போன்றவற்றில் உறைகிணறுகள் அமைக்கும் மரபும் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட குளத்தில் எட்டுச் சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வைக்கோல் மற்றும் கருக்காய் போன்றவற்றை வைத்துக் களிமண்ணைப் பூசிக் கல் செய்வதையும் சோழர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். அந்தச் சுடுமண் கல்லின் நடுப்பகுதி கறுப்பாகவும், வெளி மற்றும் உட்பகுதி சிவப்பாக இருக்கும். தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள உறை கிணறுகளின் சுடுமண்ணும் அந்த அமைப்பில் இருப்பதால் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட உறை கிணறு என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்தக் குளத்தை அகழாய்வு செய்தால் பழைமையான சிற்பங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.