புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது.
இங்கு விசாரணை, தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. ஓவியம், சிற்பம் உட்பட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி உரம், பூச்சி கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றையும் கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.
கத்திரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி,பலா, வெண்டை ஆகியவற்றோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது.
கவர்னர் தமிழிசை இன்று காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்று ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்டார். சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகர் வரவேற்றார். கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை கவர்னர் பாராட்டினார்.
சிறை கைதிகள், பாரம்பரிய முறையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள் சாகுபடி செய்திருப்பதையும் வெகுவாக பாராட்டினார். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை கவர்னர் தமிழிசை நட்டார். அங்குள்ள கைதிகளிடம், சிறையில் உள்ள வசதிககள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறை வளாகத்தில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. சிறை கைதிகள் விளைவித்த விவசாய பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தையில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டனை காலம் முடிந்த கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக மனிதாபிமானம் மற்றும் சட்டரீதியாக அனுகப்படும். காரைக்கால் சிறை முழுவதுமாக கட்டி முடிக்க 2 ஆண்டாகும். அதுவரை அங்குள்ள கைதிகள் புதுவை சிறையில் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.