தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனையும், துணை தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ரமேஷ் ஆகிய ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வரும் 31ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்காக கடைசி நாள் ஜூன் மூன்றாம் தேதி ஆகும்.