திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பு, பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். ஒரு தலை ராகம், உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி என பல சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்தவர். அவருக்கு இப்போது 67 வயதாகிறது.
இந்நிலையில் டி.ராஜேந்தருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன், நெஞ்சு வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை இரவு, சிம்புவுக்கு நெருக்கமான ஹரிஹரன் கஜேந்திரன், “டிஆர் சார் இப்போது நலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி அதிகம் தகவல் இல்லை. ஆனால் சிம்பு அண்ணா விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன். டிஆர் சார் ஒரு நேர்மையான மனிதர். அவர் நலமாக இருப்பார். பிரார்த்தனைகள்.”என்று ட்வீட் செய்துள்ளார்
இந்நிலையில் வரும் வெள்ளிக் கிழமை, சிம்பு’ மேல் சிகிச்சைக்காக ராஜேந்தரை சிங்கப்பூர் அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“