ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த எழுவரில் ஒருவரான பேரறிவாளன், கடந்த மே 18-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். ஆனால் காங்கிரஸ், பேரறிவாளன் நிரபராதியாக வெளிவரவில்லை எனக் கூறிவந்தது, கூறிவருகிறது. இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலையில், தி.மு.க-வுடனான முரண்பாடு குறித்து காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய திருநாவுக்கரசர், “இந்த விவகாரத்தில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதற்கு ஒன்றும் கிடையாது. இது புது செய்தியோ, புது நிகழ்வோ ஒன்றும் கிடையாது. இதையெல்லாம் தெரிந்துதான் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். எங்களுடைய கருத்து தெரிந்துதான் அவர்களும் எங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
விடுதலைக்குப் பிறகு முதல்வரைச் சந்தித்த பேரறிவாளனை ஸ்டாலின் அரவணைத்தது குறித்து தங்களின் கருத்து என்ன என்று திருநாவுக்கரசரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், “இந்த விடுதலை தவறான முன்னுதாரணம் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். அதனால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் விமர்சித்துக் கொண்டிருப்பது எங்கள் வேலையில்லை… பேரறிவாளனிடம் கைகொடுக்க வேண்டும், கட்டி அரவணைக்க வேண்டும் என்றெல்லம் நாங்கள் சொல்ல முடியாது. பேரறிவாளன் நிரபராதி என விடுதலை செய்யப்படவில்லை. காங்கிரஸும், தி.மு.க-வும் ஒடஞ்சி தனித்தனியா போகணும், அதற்குதானே கேள்வி கேட்கிறீர்கள். அதுமாதிரி ஆசைப்படாதீங்க, அவ்ளோ சீக்கிரம் அது நடக்காது. எங்கள் கூட்டணி தொடரும்” என்றார்.