தி.மு.க அரசின் ‘மாஸ்டர் பீஸ்’: 12,525 கிராம பஞ்சாயத்தையும் மெருகேற்றும் விவசாய திட்டம்

தரிசு நிலங்களை சாகுபடி செய்தல், நீர் வளத்தைப் பெருக்குதல், விளைச்சலைப் பெருக்குதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், சாகுபடிப் பரப்பை அதிகரிக்க, திமுக அரசின் முதன்மைத் திட்டமான ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்சித் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (23.05.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை’ தொடங்கி வைத்தார்.

‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ ஐந்தாண்டுகளில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையின் 7 முக்கியப் பகுதிகளில் ஒன்று, அதிக சாகுபடி விவசாயிகளின் தன்னிறைவு மற்றும் கிராமங்களில் தன்னிறைவை உறுதி செய்வதாகும். விவசாயத்தில் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“ஊரக வளர்ச்சித் துறையின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதால், கிராமங்களில் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இந்த திட்டம் முதல் ஆண்டில் ரூ.227 கோடி மதிப்பில், 1,997 கிராம ஊராட்சிகளில் இரண்டாம் ஆண்டில் ரூ. 300 கோடி மதிப்பில் 3,204 கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து அரசு துறைகளின் நலத்திட்டங்களும் இந்த கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “கிராமப்புற வளர்ச்சி ஒரு வெகுஜன இயக்கமாக மாற வேண்டிய நேரத்தில், கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்வர் கூறினார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு உறுதி செய்யப்பட்டு, நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தரிசு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கான அரசு பணி ஆணை, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஓரங்களில் பழச்செடிகள், மற்றும் தென்னை கன்றுகள் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்குவதற்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், ஆதி திராவிட விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் கிணறு தோண்டுவதன் மூலம் நீர்ப்பாசன வசதிகள், பண்ணைக் குட்டைகளை உருவாக்குதல் மற்றும் அக்ரி கிளினிக் அமைக்க பணி ஆணையை வழங்கினார்.
அதே நேரத்தில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதியில் 80% இந்த கிராமங்களுக்கு திருப்பிவிடப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்தையும் மெருகேற்றும் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்சித் திட்டம்’ என்கிற இந்த விவசாய திட்டத்தை திமுக அரசின் மாஸ்டர் பீஸ் என்று கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.