பெய்ஜிங்: 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய ஆடியோ சீனாவில் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்துமோ என்ற அச்சம் தைவான் மக்களிடையே நிலவி வருகிறது.
சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குவாட் மாநாட்டில் கலந்துகொள்ளும் முன்பு, ஜப்பான் பிரதமரைச் சந்தித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், சீனா பேராபத்திடம் விளையாடிக் கொண்டு இருக்கிறது என்று எச்சரித்துள்ளார்.
தைவானை வலுக்கட்டாயமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சீன முயற்சிக்கு எதிராக அமெரிக்கா ராணுவ ரீதியில் தலையிடுமா என ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர், ‘‘ஆம். நிச்சயம் தலையிடுவோம். சீனா ஆபத்துடன் விளையாடுகிறது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய ஆடியோ வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மூத்த ஊழியர்கள் இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் கசியவிட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது. 57 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோவில் போர்க்கப்பல்கள், 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளது தைவான் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கப்பல், ராணுவ வீரர்கள் குவிப்பு அதிபர் ஜி ஜின்பிங் பேசியது தைவான் மீதான படையெடுப்புக்கான ஆயத்தமா என்ற பரபரப்பு உலக நாடுகளிடையே உள்ளது. இந்த ஆடியோவில் அதிபர் ஜி ஜின்பிங், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர், துணைச் செயலர், கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் பேசியதும் இடம்பெற்றுள்ளது.
1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்கள், 1,653 ஆளில்லாமல் இயக்கும் கருவிகள், 20 விமான நிலையங்கள், 6 கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுநீக்கும் மையங்கள், 14 அவசரகால பரிமாற்ற மையங்கள், உணவு தானிய கிடங்குகள், மருத்துவமனைகள், ரத்த சேகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், கேஸ் நிரப்பும் நிலையங்களை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.