கோயில் – மசூதி சர்ச்சைகள் நாடு முழுவதும் அதிக அளவில் எழுந்து வரும் நிலையில், கடந்த 1991-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது.
வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அங்கு சிவலிங்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு மதரீதியான விவாதங்களை நாடு முழுவதும் தொடக்கி வைத்துள்ளது.
இதற்கிடையே, மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே உள்ள விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளது.
இப்பிரச்சினை 1973-ம் ஆண்டே இருதரப்பு ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்த நிலையில், இதை எதிர்த்து ஒரு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 73-ம் ஆண்டு ஒப்பந்தம் முறைகேடாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும். எனவே, விசாரணை நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கோயில் – மசூதி சர்ச்சைகள் தொடர்ந்து கிளம்பிவரும் நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1991-ம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தபோது, ராமர் கோயில் கட்டக் கோரி அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். அப்போது நாடு முழுவதும் மதரீதியான பதற்றம் எழுந்தபோது, அதை சரிசெய்ய நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கொண்டு வந்தது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* நாடு விடுதலை பெற்ற 15, ஆகஸ்ட் 1947 தினத்தன்று இருந்த நிலையில் இருந்து, எந்த வழிபாட்டுத் தலத்திலும் மாற்றங்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்த நிலை அப்படியே தொடர வேண்டும்.
* எந்த வழிபாட்டுத் தலங்களையும் வேறு பிரிவினருக்கோ, ஒரு பிரிவுக்குள் உள்ள மற்ற பிரிவுக்கோ முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்கி மாற்றங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
* வழிபாட்டுத் தலங்களில் மாற்றங்கள் கோரி ஏதேனும் வழக்கு, மேல்முறையீடு மனுக்கள் தொடரப்பட்டிருந்தால் அவை காலாவதியாகிறது. இனிமேல் புதிதாக வழக்குகள் தொடர தடை விதிக்கப்படுகிறது.
* இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.
* இச்சட்டம் தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பொருந்தாது.
* ராமர்கோயில் – பாபர் மசூதி விவகாரத்துக்கும் இச்சட்டம் பொருந்தாது.
இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறும் மக்கள் பிரதிநிதிகள், பதவியிழக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951-லும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், மதுரா வழக்கைப் பொறுத்தமட்டில், ஒப்பந்தம் முடிவடையவில்லை என்பதால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் அதற்குப் பொருந்தாது என்று மதுரா நீதிமன்றம் முடிவு செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட் டுள்ளது.
அதேபோன்று, கியான்வாபி விவகாரத்திலும் இச்சட்டம் பொருந்தாது என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என்றால் அது 15.8.1947-ம் தேதியும் இருந்திருக்கும். எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இதற்கு பொருந்தாது என்று வாதிடுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ‘நீதி பெறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமை. அந்த உரிமையையே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் பறிப்பதால், இச்சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், இந்து, ஜெயின், புத்த மதத்தினர், சீக்கியர்கள் உரிமையை இச்சட்டம் பறித்துள்ளதால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த ஆண்டே உத்தரவிட்டும் மத்திய அரசு சார்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.