சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார்’ என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் ”சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், திங்கள் கிழமை(மே 23) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் பாலியல் குற்றவாளி ராஜீவ் காந்திதான். ஏன் அதைப் பற்றி எல்லாம் ஜோதிமணி பேசவில்லை. நான் பாலியல் குற்றம் செய்தேன் என்பதை ஜோதிமணி பார்த்தாரா? உங்களை தங்கை என்பதைத் தவிர வேறு ஒன்றும் கூறவில்லை, பாலியல் குற்றவாளி ராஜீவ்காந்தி தான் என விமர்சித்தார்.
சீமானின் இந்த பேச்சு, ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், எம்.பி. ஜோதிமணி இன்று கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, சீமான் பேசியிருந்ததற்கு பதில் அளித்திருந்தேன். அதற்கு நேர்மையாக பதில் அளிக்க முடியாத சீமான், மிகவும் ஆபாசமாக, வக்கிரமாக, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பதில் சொல்லியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி ஆதாரத்துடன், சீமான் மீது புகார் அளித்திருந்தார். அதில் உண்மை இல்லையெனில் சீமான் விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடுத்திருக்கலாமே?
நான் மட்டுமல்ல சீமான் மீது பல ஆண் தலைவர்கள் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். ஆனால் அப்போது எதிர்த்து பேச முடியாத சீமான், ஒரு பெண் மக்களவை உறுப்பினரான என்னை கையைப் பிடித்து இழுத்தேனா? இங்கு வா என்று அழைத்தேனா? எனக் கூறி விட்டு பின் சகோதரி என்கிறார்.
சகோதரி என கூறும் பெண் மீதே சீமானுக்கு அவ்வளவு பாலியல் வக்கிரம், ஆபாசமும் இருக்கிறது.
அரசியலில் சீமான் போன்றவர்கள் பெண்கள் மீது ஆபாசத் தாக்குதல் மேற்கொள்வது, அருவெறுக்கத்தக்க வகையில் பேசினால், அவர்கள் அரசியலிருந்தே ஓடிவிடுவார்கள் என நினைக்கின்றனர்.
சீமான் போன்ற குற்றவாளிகள், பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுபவர்கள் தான் இதற்கு பயப்படவேண்டும். ஆபாசத் தாக்குதலை எதிர்க்கொள்வது எனக்கு புதிதல்ல. பாஜக இதனைத் தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் பி டீம்தான் சீமான்.
எனக்கு வாக்களித்த கரூர் மக்களவை மக்கள் மானங்கெட்டு வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்களவைத் தொகுதி மக்கள் மட்டுமல்ல, தமிழர்கள் உழைத்து நேர்மையாக வாழ்பவர்கள். சீமான் போல அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களை சுரண்டி ஆடம்பர வாழ்க்கை வாழுபவர் கிடையாது என்று ஜோதிமணி பேசினார்.
இந்த பேட்டியின் போது, கரூர் மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தென்காசி எஸ்கேடி காமராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“