பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள்
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் பிருத்விராஜ். இதில் அக்ஷய்குமாருடன் சஞ்சய் தத், சோனுசூட், மனுஷினி சில்லர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி உள்ள படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
இந்த படம் வட இந்தியாவை முகலாயர்கள் ஆண்டபோது அவர்களை வீரமாக எதிர்த்து நின்று இந்துஸ்தானி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னன் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்று படம். வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. வட இந்தியாவில் செயல்பட்டு வரும் கர்ணிக் சேனா, அகில பாரத சத்ரிய மகாசபா, சனாதன் சேனா ஆகிய அமைப்புகள் “மன்னர் பிருத்விராஜை அவமதிக்கும் விதத்தில் அவரது படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர். சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் என்பதே அவரது பெயர், அந்த பெயரையே படத்திற்கு வைக்க வேண்டும். படத்தில் அவர் எந்த மாதிரி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிய வெளியீட்டுக்கு முன்பு எங்களுக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டும்” என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.