பெட்ரோல் விலை | “மத்திய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு” – முதல்வர் ஸ்டாலின்

சேலம்: “எப்போதும் மத்திய அரசு வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே, மத்திய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு” என்று பெட்ரோல் விலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, “ஓயாத உழைப்பின் ஓராண்டு” என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, பெட்ரோல் விலை – வரி விவகாரம் குறித்து பேசியது: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், கழக ஆட்சி அமைந்ததும் பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்று சொன்னோம். அது முடியுமா? சாத்தியமாகுமா? என்று பலரும் கேட்டார்கள். இவர்களால் முடியாது என்று விமர்சனம் செய்தார்கள்.

அவற்றை எல்லாம் தாண்டி, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த அரசுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இப்படி விலையை நாம் குறைத்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், இரண்டு நாளைக்கு முன்பு, ஒன்றிய அரசு இப்போதுதான் குறைத்திருக்கிறது. லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததன் மூலமாக, நமது மாநில அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை வருவாய் இழப்பு என்று அரசாங்கத்தின் நிர்வாகச் சொற்களில் நான் சொன்னாலும், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1,160 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் உண்மை.

இன்றைய தினம், ஒன்றிய அரசானது தனது வரியைக் குறைத்திருக்கிறது. இதன் மூலமாக, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை 7 ரூபாயும் குறைகிறது. இதில் ஒன்றிய வரிக் குறைப்பு 8 மற்றும் 6 ரூபாய். மாநில அரசினுடைய வரிக் குறைப்பு 1.5 ரூபாய் மற்றும் 1 ரூபாய். ஏன் என்றால், எப்போதும் ஒன்றிய வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே, ஒன்றிய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு.

2014-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அன்றைக்கு இருந்த பெட்ரோல் விலை என்ன? இப்போதைய விலை என்ன? என்பதை அவர்கள் விளக்கியாக வேண்டும்.

2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் மொத்த வரியானது லிட்டருக்கு 9 ரூபாய் 48 பைசா என்று இருந்தது. 2022 மே மாதத்தில் ஒன்றிய வரியானது 27 ரூபாய் 90 பைசா என்று இருக்கிறது. இதில்தான் 8 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், 19 ரூபாய் 90 பைசா ஒன்றிய வரி நீடிக்கவே செய்கிறது. எனவே, அவர்கள் ஏற்கனவே மிக அதிகமாக ஏற்றியதை இப்போது கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். உண்மையாக பார்த்தால், அவர்கள் இன்னும் அதிகமாவே குறைக்க வேண்டும்.

பலமடங்கு விலையை ஏற்றிவிட்டு, சிறிய அளவில் குறைத்திருக்கிறார்கள். எவ்வளவு ஏற்றினார்களோ, அந்த அளவிற்கு குறைத்தாக வேண்டும்.

ஐந்து மாநிலத்தில் தேர்தல் நடந்ததால் இதன் விலையை உயராமல் பார்த்துக் கொண்டார்கள். தேர்தல் முடிந்ததும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை அதிகமாக உயர்த்தினார்கள். இந்த இரண்டு மாதத்தில் 10 ரூபாய் விலை அதிகமானது. அவர்கள் உயர்த்தின அந்தப் பத்து ரூபாயில், 9 ரூபாய் 50 காசை இப்போது குறைத்திருக்கிறார்கள்.

மாநிலங்களின் அனைத்து நிதி உரிமையையும் சுரண்டித் தின்றுவிட்டு, ஒருவிதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகள் மீதும் ஒன்றிய பாஜக அரசு சுமத்துகிறது.

மக்களோடு மக்களாக இருந்து, மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தரவேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது.

கல்வி – மருத்துவம் – சுகாதாரம் – குடிநீர் – மின்சாரம் – சாலை வசதிகள் – கழிவுநீர்க் கால்வாய்கள் – சத்துணவு – ஊட்டச்சத்து – மானியங்கள் – சலுகைகள் என அனைத்தையும் மாநில அரசிடம் இருந்துதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அத்தகைய மாநில அரசுகளை மக்களுக்காகச் சேவையாற்ற விடாமல் தடுப்பதற்கு நிதி உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு பறிக்கிறது.

ஒன்றிய அரசாங்கத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய 21 ஆயிரத்து 761 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இதுவரை வரவில்லை. இந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளோம் என்றால் இத்தகைய நிதி நெருக்கடியைப் பொறுத்துக்கொண்டு செய்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான், நமது கழக அரசு பல்வேறு வாக்குறுதிகளையும், மக்கள்நலத் திட்டங்களையும் நிறைவேற்றிச் சாதனை படைத்து வருகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.