போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் அதிர்ச்சி

இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலசந்தர்

பாலசந்தர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததினால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு (PSO) வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும், அந்த பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாகச் சென்னையில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பா.ஜ.க பிரமுகர் ஒருவர் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பா.ஜ.க தரப்பினர் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகிறார்கள். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை. தி.மு.க அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமான்ய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல். மத்திய சென்னை மாவட்ட பட்டியலின அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழக பா.ஜ.க துணை நிற்கும்” என்று ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலசந்தர்

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தலைநகர் சென்னை கொலை நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலின பிரிவு தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படவேண்டும். சென்னை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவது வேதனை அளிக்கிறது. குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்குப் பொறுப்பேற்று சென்னை காவல்துறை ஆணையர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தகுதிவாய்ந்த அதிகாரியை நியமித்து குற்றங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மக்கள் அச்சத்துடனே வாழ்ந்துவரும் சூழல் நிலவுகிறது. முதல்வர் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.