தமிழக அரசியலில் கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியில், திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1 ராஜ்ய சபா சீட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்பட பல தலைவர்கள் கடும் போட்டியில் உள்ளனர்.
தமிழகத்தில் 6 ராஜ்ய சபா இடங்கள் காலியானதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஜூன் 10 ஆம் தேதி தேர்தலை அறிவித்துள்ளது. 1 ராஜ்ய சபா எம்.பி-யைத் தேர்ந்தெடுப்பதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. அதனால், ஆளும் திமுக மற்றும் கூட்டணிக்கு 4 ராஜ்ய சபா இடங்களும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுக சார்பில், தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், கிரிராஜன் 3 பேரை வேட்பாளர்களாக அறிவித்தது. மேலும், 1 ராஜ்ய சபா இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி யாருக்கு என்று மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தமிழக அரசியலில் கோஷ்டிப் பூசலுக்கு பெயர்போன தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், ஒரு ராஜ்ய சபா இடத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கேட்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் ராஜ்ய சபா எம்.பி பதவி தனக்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறார். அதே போல, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுதர்சன நாச்சியப்பன், விஸ்வநாதன், ஆகியோரும் தங்களுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு டெல்லி தலைமையிடம் காய் நகர்த்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி பதவிக் காலம் முடிவடைவதால், அவர் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவர் தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்துள்ளாராம்.
காங்கிரஸ் தலைமையும் பாஜக அரசை மாநிலங்களவையில் எதிர்கொள்ள ப. சிதம்பரத்தை ராஜ்ய சபாவுக்கு அனுப்புவது சரியானது என்று கருதுகிறதாம். ஏனென்றால், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என்று அனுபவம் மிக்க ப.சிதம்பரம் பாஜகவை காங்கிரஸ் நிலைப்பாட்டில் இருந்து கடுமையாக எதிர்ப்பார் என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது.
அதே நேரத்தில், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம் ஒரு சீட்டு என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுவதால், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பதால் ப.சிதம்பரத்துக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி அளிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஒருவேளை ப.சிதம்பரத்துக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் இல்லை என்றால், காங்கிரசில் கடுமையான போட்டி நிலவுகிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் ராஜ்ய சபா எம்.பி பதவி தனக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையை சந்திக்க டெல்லி வரை சென்று காய் நகர்த்தி வருகிறார்.
கே.எஸ். அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி வகித்த இத்தனை ஆண்டு காலத்தில் அவருக்கு எதிராக கட்சிக்குள் எந்த எதிர்ப்புகள் எழவில்லை என்பதே பெரிய சாதனை என்று கூறுகின்றனர். அதே போல, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், போட்டியிட வாய்ப்பு இருந்தும் கே.எஸ். அழகிரி போட்டியிடாமல், தேர்தல் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி தேனியைத் தவிர அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எப்போதும் இல்லாத அளவில் காங்கிரஸ் கட்சி நிறைய போராட்டங்களை நடத்தியுள்ளது. இதற்கெல்லாம் கே.எஸ் அழகிரியின் தலைமைதான் காரணம். அதனால், தனது பணியைக் குறிப்பிட்டு ராஜய சபா எம்.பி பதவியைக் கேட்டு வருகிறாராம்.
அதே போல, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சன நாச்சியப்பன், ஈ.வி.கே.எஸ். இளஞ்கோவன் ஆகியோரும் ராஜ்ய சபா எம்.பி பதவி தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள விஸ்வநாதன், இதுவரை தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு ஒரு பட்டியல் இனத்தவர் கூட காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், அந்த இடத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறாராம். இதனால், காங்கிரஸ் கட்சியில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகக் கூறுகின்றனர்.
ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், இதுவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 1 ராஜ்ய சபா சீட்டுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும், ப.சிதம்பரத்துக்கே வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”