வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை, ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்புடன் இது நடத்தப்பட உள்ளது.
நாட்டின் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இதன்படி, 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியானது.இதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணி, 2020ல் துவங்க இருந்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால், மக்கள் தொகை கணக்கெடுப்பை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுக்க முழுக்க மின்னணு முறையில் மேற்கொள்வது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து, புதிய முன்னோடி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2023 ஜன., 1ல் துவக்கப்பட உள்ளது. வழக்கமாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். இதனால் அதிக நேரம் மற்றும் செலவு ஏற்படுகிறது. இதில், சில குறைபாடுகளும் உள்ளன.அதனால், மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக, ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படும். அதன் வாயிலாக மக்கள் தங்களுடைய
தகவல்களை பதிவு செய்யலாம்.
இந்த தகவல்கள் ஆதாருடன் இணைக்கப்பட உள்ளன. இதனால், மோசடி செய்வது தடுக்கப்படும். இதற்கான முன்னோட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, ஜூலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்புக்காக, 8,000 கோடி ரூபாயை
மத்திய அரசு ஒதுக்க உள்ளது.இந்த முன்னோடி திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலகிலேயே மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் முதல் நாடாக இந்தியா விளங்கும்.
– புதுடில்லி நிருபர் –
Advertisement