நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 29-ந் தேதி முடிவடைகிறது.
தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ரமேஷ் ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசனையும், உதவித் தேர்தல் அதிகாரியாக, சட்டசபை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறை நாளான 28-ந் தேதி, மற்றும் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களை தவிர்த்து, வரும் 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும்.
காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது. கூடுதலாக மனுத்தாக்கல் செய்தால், ஜூன் 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஏற்கனவே திமுக சார்பாக மூன்று இடங்களுக்கு போட்டியிடக்கூடிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாநிலங்களவை தேர்தலையொட்டி தேர்தல் மன்னன் பத்மராஜன் 230 ஆவது முறையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இவர் மாநிலங்களவை தேர்தலில் 50வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM