வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்… எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?

கடந்த ஆண்டு கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில், அவரின் கணவர் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் நேற்று காலை தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முழு விவரங்கள், இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அவருடைய கணவர் கிரண்குமாருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து கொல்லம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிசி 304ன் கீழ் 10 ஆண்டுகளும், 306ன் கீழ் 6 ஆண்டுகளும், 498ன் கீழ் 2 ஆண்டுகளும் அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இந்த இரு தண்டனைகளையும் அவர் ஒன்றாக அனுபவித்தாலே போதும். அதன்படி கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பது உறுதியாகியுள்ளது. இதனுடன் கிரண்குமாருக்கு ரூ.12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்தை பெண்ணின் பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு விவரங்களுக்கு… `கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ – கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
image
இந்த தீர்ப்புக்கு, விஸ்மயாவின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தங்கள் மகளுக்கு நியாயம் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது மகள் விஷயத்தில், உரிய முறையில் விசாரணை நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து கண்ணீருடன் விஸ்மயா குடும்பத்தினர் இன்று வீடு திரும்பினர். குறிப்பாக விஸ்மயாவின் சகோதரர் விஜித் நீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில், `இந்த தீர்ப்பு எனது சகோதரியை திருப்பிக் கொண்டு வராதுதான். ஆனால் விஸ்மயா போன்ற இன்னொரு சகோதரிக்கு அப்படியொரு துன்பம் அனுபவிக்காமல் இருக்க, இத்தீர்ப்பு உதவும்’ என்றுள்ளார்.
இந்த நேரத்தில், விஸ்மயா கடந்து வந்த பாதையை, விஸ்மயா எதிர்கொண்ட வலிகளின் பாதையையும் கண்ணீரையும் அறிய முற்பட்டோம். `இனியொரு விஸ்மயாவை நாம் இழக்காமல் இருக்க’, நாம் இழந்த விஸ்மயா கடந்த வந்த பாதையை நாம் அறிவது முக்கியம் என்ற நோக்கத்தில் இதுசார்ந்த தேடலை தொடங்கினோம். அப்போது கேரள அரசு, கேரள காவல்துறை, கேரள ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் நமக்கு கிடைத்தவற்றின் விரிவான தொகுப்பு, இங்கே. உங்களுக்காக.
image
தனது 22-வது வயதில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தார் ஆயுர்வேத மாணவி விஸ்மயா. மேட்ரிமோனி மூலம் கிரண் அவருக்கு அறிமுகமாயிருந்தார். தானே தனக்கான இணையரை தேர்ந்தெடுக்க வேண்டுமென எண்ணி, மேட்ரிமோனி வழியாக தானேதான் கிரணை விஸ்மயா தேர்ந்தெடுத்ததாக விஸ்மயாவின் சகோதரர் விஜித் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்திருந்தார். செப்டம்பர் 12, 2019-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பின் எட்டு மாதங்கள் கழித்து மே 31, 2020-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் முடிந்து 9 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், விஸ்மயா கணவரால் தாக்கப்பட்டிருந்திருக்கிறார். இதுதொடர்பாக தன் தந்தையிடம் அவர் பேசிய ஆடியோவொன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த ஆடியோவில், “எனக்கு இங்க இருக்கவே பயமாருக்கு ப்பா. இதுக்கு மேல் என்னால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கு நம்ம வீட்டுக்கே திரும்பி வரணும்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் தந்தை, விஸ்மயாவை சமாதானப்படுத்துகின்றார். “நீ நிச்சயம் நம்ம வீட்டுக்கு வரலாம். அதேநேரம், நினைவில் வைச்சுக்கோ…. கிரண் இதையெல்லாம் கோவத்தினால் செய்கிறார். அவ்வளவுதான். இது வாழ்வில் எல்லோருக்கும் நடப்பதுதான். இதுதான் வாழ்க்கை” என்கிறார். இப்படியாக நீள்கிறது அந்த உரையாடல்.
image
விஸ்மயாவின் திருமணமென்பது, நாம் பத்தோடு பதினொன்றாக கடக்கும் சாதாரண விஷயமில்ல. ஏனெனில் அது பல லட்சங்கள், கோடிகள் வரதட்சணையாக தரப்பட்டு மிக ஆடம்பரமாக நடந்தேறிய ஒரு நடுத்தர (அப்பர் மிடில் க்ளாஸ்) குடும்பத்தின் கல்யாணம். விஸ்மயாவை திருமணம் செய்துகொள்ள கிரண் குமாருக்கு 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 சவரன் (800 கிராம்) நகை, ஒரு டொயாட்டோ யாரிஸ் கார் ஆகியவை, இவற்றுடன் சில லட்சங்கள் ரொக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் பிறகு, இன்னும் தனக்கு சில லட்சங்கள் ரொக்கம் வேண்டுமென்று கூறி, தனக்கு கொடுக்கப்பட்ட காரை வேண்டாமென்றும்; வேறொரு மாடல் கார்-தான் தனக்கு வேண்டுமென்றும் கூறியுள்ளார் கிரண். இவையாவும் கேரள காவல்துறை கிரண் மேல் பதிந்த சார்ஜ்ஷீட்டில் இருக்கும் தகவல்கள்.
image
மே 31-ல் விஸ்மயாவுக்கு திருமணமான நிலையில், ஜூன் 9-ம் தேதி, விஸ்மயாவின் 100 சவரன் நகையில் சுமார் 42 சவரன் நகையை தனது சொந்த லாக்கருக்கு மாற்றியிருக்கிறார் கிரண். இதற்குப் பிறகு ஆகஸ்ட் 29-ம் தேதியளவில், ஷாப்பிங் சென்ற இருவருக்கும் மீண்டும் பெரியளவில் பிரச்னை வந்திருக்கிறது. சண்டை முற்றியதால், பாதி வழியில் காரிலிருந்து விஸ்மயாவை இறக்கி விட்டிருக்கிறார் கிரண். கிரணின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த விஸ்மயா, எங்கே செல்வதென தெரியாமல் அருகிலிருந்த வீடொன்றில் இருந்தோரிடம் அடைக்கலம் சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்து, கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் மீண்டும் கிரணின் வீட்டுக்கே சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் விஸ்மயாவுக்கு அடைக்கலம் கொடுத்த நபர், தற்போது காவல்துறையினருக்கு முக்கிய சாட்சியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு ஏராளமான முறை விஸ்மயா இப்படி கிரணால் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். அதில் உச்சபட்சமாக ஜனவரி 2, 2021-ல், புதுவருடப்பிறப்பிற்கு மறுநாள் விஸ்மயாவின் வீட்டில், அவருடைய தாய் – தந்தை – சகோதரர் முன்னிலையிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்த கிரண், அதோடு தன் மனைவியின் தாய்வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே சென்று தனக்கு போதுமான அளவு வரதட்சணை தரவில்லை என கூச்சலிட்டிருக்கிறார். “இப்படி ஒன்றுக்கும் உதவாத ஒரு பெண்ணையும், ஒரு உதவாத கார்-ஐயும் எனக்கு கொடுத்துள்ளீர்களே” என கத்தியிருக்கிறார். தொடர்ந்து விஸ்மயாவை அறைந்துமிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், குறுக்கே சென்று மறித்து மகளை காப்பாற்ற நினைத்துள்ளனர். கிரண், அவர்களையும் தாக்கியுள்ளார். கிரணின் தாக்குதலில் மோசமாக தாக்கப்பட்டது, விஸ்மயாவின் சகோதரர் விஜித். விஜித்தின் கை எலும்புகள் முறியும் அளவுக்கு போதையில் அவரை தாக்கியிருந்திருக்கிறார் கிரண்.
image
ஜனவரி 3-ம் தேதி, கிரண் குறித்து கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரமங்கலம் காவல்நிலையத்தில் விஸ்மயாவின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே. ஆம், அங்கு மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையே நடந்துள்ளது. சென்ற முறை விஸ்மயாவை அவரது தாய் – தந்தை `சமூகத்தின்’ பெயரால் சமாதானப்படுத்தினர் என்றால், இம்முறை விஸ்மயாவின் தாய் – தந்தையையே `சமூகத்தின்’ பெயரால் சமாதானப்படுத்தினர் காவல்துறையினர். மீண்டும் விஸ்மயா ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
ஜனவரி 3, 2021 தனது தாய் வீட்டுக்கு திரும்பிய விஸ்மயா, தனது தேர்வொன்றின் ஹால்-டிக்கட்டுக்காக ஜனவரி 4, 2021 கணவரான கிரணின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் அங்கேயே தங்கியுள்ளார். சில தினங்கள் கழித்து, ஜனவரி 11-ல் விஸ்மயாவின் சகோதரருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதையே காரணமாக வைத்து, விஸ்மயா தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின் அங்கு இரு மாதங்கள் தங்கியிருந்து தேர்வு எழுதியுள்ளார். மார்ச் மாதம் வரை நிம்மதியாக சென்ற அவரது வாழ்வில், தேர்வு முடியும் நாளன்று மீண்டும் கிரணால் போராட்டம் தொடங்கியுள்ளது. தேர்வு முடிந்த நாளில், கையோடு விஸ்மயாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண்.
image
அவ்வபோது அடி, உதை… அடிக்கடி சண்டை… ஏராளமான வசவுகள் என சென்றுகொண்டிருந்த விஸ்மயாவின் வாழ்வில் சரியாக ஏப்ரல் 17, 2021-ம் தேதி மீண்டும் அடுத்த போராட்டம். விஸ்மயாவின் மொபைல்-ஐ வாங்கி உடைத்தெரிந்திருக்கிறார் கிரண். ஃபோனை உடைத்துவிட்டு, “இனி நீன் உன் அம்மாவிடம் மட்டும்தான் பேசவேண்டும். அதுவும், என் மொபைலில் இருந்து மட்டும்தான் பேசவேண்டும். உன் அப்பாவிடமோ, சகோதரனிடமோ நீ பேசக்கூடாது” எனக்கூறி விஸ்மயாவின் முகத்தில் தனது ஷூவால் சராமாரியாக தாக்கியுள்ளார் கிரண். ஒருவழியாக தப்பித்து பிழைத்து, தனது தாயிடம் இதுகுறித்து பேசியுள்ளார் விஸ்மயா. ஆனால் எப்படியாவது தனது மகளின் வாழ்க்கை சீக்கிரம் சரியாகிவிடும் என நினைத்து யாரிடமே சொல்லாமல் இருந்திருக்கிறார் அத்தாய். எங்கே தன் குடும்பத்தினரிடம் மகளின் கதியை சொன்னால், அவர்கள் மீண்டும் சண்டைக்கு சென்று பிரச்னை பெரிதாகிவிடுமோ என்று நினைத்து, அமைதியாக இருந்திருக்கிறார் அவர்.
ஆனால் விஸ்மயாவின் வாழ்வில், அவரது நம்பிக்கைக்கு ஒளிதரும் சிறு கீற்றும் இல்லை. அனுதினமும் அடிவாங்கிக்கொண்டிருந்த அவர், ஜூன் 21ம் தேதி தன் வாழ்வின் முடிவை தானே தீர்த்துக்கொண்டுள்ளார். இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தன் உறவுக்காரரொருவரிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார் விஸ்மயா. அப்போது தான் தாக்கப்பட்ட விதம் குறித்தும், தனது காயங்கள் குறித்தும், முகம் – கை – தோள்பட்டையில் இருந்த வடுக்கள் குறித்தும் புகைப்பட வழியிலும், ஆடியோ வழியிலும், டெக்ஸ்ட் வழியிலும் சொல்லியுள்ளார் விஸ்மயா.
image
இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன், சரியாக ஜூன் 20-ம் தேதி, விஸ்மயா தனது தாயிடம் பேசியுள்ளார். இதுகுறித்து அவருடைய அம்மா தான் அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “என் பொண்ணு ஜூன் 20 எங்ககிட்ட பேசினா. அவளுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட, 5,500 ரூபாய் தேவைப்படுவதாக சொல்லியிருந்தா. எங்கிட்ட பணமில்ல என்பதால, கிரண் கிட்ட கேட்க சொன்னேன். ஆனால் கிரணிடம் கேட்டால், அவர் தன்னிடம் சண்டைபோட்டு கத்துவார் என்று சொன்னாள். ஏற்கெனவே விஸ்மயா எங்களோடு பேசுவது கிரணுக்கு பிடிக்காததால், சில நம்பர்களை அவரே ப்ளாக் செய்துவிட்டார் அவள் ஃபோனிலிருந்து. மிகவும் கெஞ்சிதான் எனக்கே பேசுவாள் என் மகள். ஒருமுறை பாத்ரூமிலிருந்தபடி என்னிடம் பேசினாள். அப்போ, கிரண் தன்னை மோசமா கொடூரமா தாக்கியதால, தனக்கு வாயிலிருந்து ரத்தம் வருவதா சொல்லி அழுதா. நான் அவளை எங்க வீட்டுக்கு வந்துட சொன்னேன். ஆனா அக்கம்பக்கத்திலிருந்தவங்க, சமூகத்துல இருக்கவங்க என்ன சொல்வாங்களோனு அவளுக்கு பயம். அதனாலயே அந்த கொடுமையெல்லாம எம்மக சகிச்சுகிட்டா” என்றுள்ளார்.
image

இதைத்தொடர்ந்து ஜூன் 21, 2021. விஸ்மயா தற்கொலை செய்து மரணிக்கிறார். குளியளறையில் சடலமாக மீட்கப்பட்டார். விஷயமறிந்து, அன்று இரவே காவல்துறையின் சரணடைகிறார் கிரண். விஸ்மயாவின் பெற்றோர் கொடுத்த வழக்கின்கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. அப்போது மீடியாக்களில் பேசினர் கிரணின் தாயும் தந்தையும். அவர்கள் பேசுகையில், விஸ்மயாவின் குடும்பத்தின் மீதே தவறுள்ளதாக கூறினர். `கிரணை தவறாக சிக்கவைப்பதற்கான முயற்சியில் விஸ்மயாவின் குடும்பத்தினர் ஈடுபடுகின்றனர்’ என்றும் கூறினர். அதேநேரம், முந்தைய நாள் இரவும், தனது மகனும் மருமகளும் இருந்த அறையிலிருந்து ஏதோ சத்தம் வந்ததாகவும், விஸ்மயா அழுதுகொண்டே வந்து தன்னுடைய வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றும் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விஸ்மயாவிடம் `விடியும்வரை காத்திரு’ என்று கிரணின் தந்தை ஆசுவாசப்படுத்திய போதிலும், அவர்தான் (விஸ்மயா) பொறுக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மற்றுமொரு பேட்டியில், `கிரணுக்கு அளிக்கப்பட்ட டொயோட்டோ யாரிஸ் கார் அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அதற்கு சண்டைவந்தது. ஆனால் இது சின்ன வயதில் ஒருவர் செய்யும் தவறுதான்… விஸ்மயா குடும்பத்தினர் இதை சரிசெய்திருக்கலாம்’ என்றனர்.
image
இவை அத்தனைக்கும் பிறகு, கைதானார் கிரண். வழக்கு தொடர்பான தொடர் விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார். அதன்படி, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு கடந்த 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ளார். கிரண் குமார் ஜாமீன் கோரிய மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி சுஜித் கே.என் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
image
வழக்கின்போது நீதிபதி 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுக்கொண்டார். குறிப்பாக காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று (ஜூன் 23, 2022) தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் போலீஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ எனவும் நீதிபதி தெரிவித்தார். அவ்விவரங்கள் இன்று (ஜூன் 24, 2022) வெளியாகுமென சொல்லப்பட்டது. தொடர்ந்து கிரணின் ஜாமீன் நேற்றே ரத்து செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: `கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
image
கணவரின் மோசமான துன்புறுத்தலால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரங்கள் இன்று, தற்போது சில மணி நேரத்துக்கு முன் சொல்லியபடி வெளியானது. அதில்தான் கணவர் கிரண்குமாருக்கு 10 வருடம் சிறை தண்டனை, ரூ.12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்தை விஸ்மயாவின் பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
image
இதுமட்டுமே விஸ்மயாவின் ரணத்தை கொஞ்சமேனும் ஆற்றும்:
இந்தத் தீர்ப்பு இன்னுமொரு விஸ்மயாவை உருவாக்கமல் இருக்குமா என்பதை, காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் இது குறைந்தபட்சம் இன்னொரு கிரண்குமாரை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக இருக்கிறது. விஸ்மயா தற்கொலை வழக்கை பொறுத்தவரை, `தற்கொலை எதற்கும் தீர்வல்ல’ என நாம் நம் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதேயளவுக்கு, சொல்லப்போனால் அதைவிட அதிகமாக `வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம்’ `திருமணமென்பது இரு மனம் இணையும் நிகழ்வு தானே தவிர, அது எந்த நிலையிலும் சொத்துக்களை விற்கும் – இலவசமாக பரிமாறிக்கொள்வதற்கான லைசன்ஸ் அல்ல’ என்பதை நம் வீட்டு பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். போலவே `எந்தச் சூழலிலும் சக இணையரை துன்புறுத்தும் விஷயங்களை இணையரில் ஒருவர் செய்வது ஏற்புடையதல்ல. அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்’ என்றும் நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.