புதுடெல்லி: மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991, கியான்வாபி மசூதிக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கலாகி உள்ளது. இதை நேற்று பாஜக ஆதரவாளரான மூத்த வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யா அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதியின் மீதான வழக்கு பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனுள் நடத்தப்பட்டக் களஆய்வினால் மசூதிக்கும் சிக்கல் உருவாகி உள்ளது. இதிலிருந்த தப்ப, மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கலாகி உள்ளது.
இதற்கு மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 காரணமாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வாரணாசியின் மாவட்ட நீதிமன்றம் நேற்று முதல் விசாரித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இதன் தீர்ப்பு இன்று மதியம் 2.00 மணிக்கு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரான அஸ்வின் குமார் உபாத்யா ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991, கியான்வாபிக்கு பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு, கியான்வாபி மசூதியானது கோயிலை இடித்துக் கட்டப்பட்டது காரணம் எனக் கூறியுள்ளார். கோயில்களை இடித்துக் கட்டப்படுவது இஸ்லாமிய சட்டங்களின்படி மசூதிகள் அல்ல என்பது முஸ்லிம் மதக்கொள்கை எனவும் வழக்கறிஞர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனுக்கு அன்றாடம் தரிசனம் செய்ய கடந்த வருடம் மனு அளிக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இம்மனுவை தொடக்கத்தில் விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்ற உத்தரவின்படி, கியான்வாபியில் களஆய்வு நடத்தப்பட்டது. இவ்வழக்கிற்கு வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991இன்படி தடை கோரி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை அனுகியிருந்தது.
தற்போது வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளது. இச்சூழலில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த மனு தொடுக்கப்பட்டுள்ளது. இது, வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 மீதான சீராய்வு மனுவாக உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991ஐ ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மனு தொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் தொடுத்த வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் மீது மத்திய அரசிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருப்பது நினைவுகூரத்தக்கது.