கேரளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பெரும் விவாதத்தை உருவாக்கிய கொல்லம் விஸ்மயா வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், முக்கியத்துவம் மிக்க இந்த வழக்கில் இன்று தண்டனை விவரத்தைத் தீர்ப்பாக வழங்கியது. 304பி பிரிவில் 10 ஆண்டு தண்டனையும் 306 பிரிவில் 6 ஆண்டு தண்டனையும் 498 ஏ பிரிவில் 2 ஆண்டு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரே காலத்தில் அனுபவிக்கலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்புக்காக அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதனடிப்படையில் 23, மே திங்கள்கிழமை இந்தியத் தண்டனைச் சட்டம் 304 – பி (திருமணம் ஆகிய 7 ஆண்டுக்குள் நடக்கும் மரணம்) , 498 ஏ (கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துவது), 306 (தற்கொலைக்கு உடந்தையாக இருந்த்தல்) ஆகிய பிரிவுகளின் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் தண்டனையைக் குறைக்கும்படியாக கிரண்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். சூரியனுக்குக் கீழ் முதல் வரதட்சனை மரணம் அல்ல இது எனச் சொல்லி வாதிட்டுள்ளார். கிரண்குமாரும் தன் தர்ப்பு நியாயத்தைச் சொன்னார். தன் தந்தையும் தாயும் வயதானவர்கள். நோயாளிகள். என் வயதையும் கருத்தில்கொண்டு எனக்குக் குறைவான தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அரசுத் தரப்பு கிரண்குமாருக்குக் கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனால் தண்டனையை குறைக்கக் கூடாது என வாதிட்டது. இதனிடையே தண்டனை அறிவிப்புக்காக அமர்வுக்கு சிறு இடைவேளை சொல்லிவிட்டு நீதிபதி அறைக்குச் சென்றுவிட்டார். பிறகு மீண்டும் கூடிய அமர்வு, கிரண்குமாருக்கான தண்டனையை அறிவித்தது.
விஸ்மயாவின் கணவர் கிரண் குமார், மோட்டார் வாகனத் துறையில் ஆய்வாளராகப் பணியிலிருந்தவர். விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு மாணவி. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்துக்காக 100 சவரன் நகையும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் பணமும் நிலமும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கார் வாங்கியதில் கிரண் குமாருக்கு விருப்பக் குறைவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த கார், தன் தகுதிக்குக் குறைவு எனக் கூறியிருக்கிறார்.
இதை வைத்து மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார். மனைவியின் வீட்டுக்கு வந்தபோது சண்டை முற்றிக் கைகலப்பாக மாறியிருக்கிறது. விஸ்மயாவை அடித்ததைத் தட்டிக் கேட்ட விஸ்மயாவின் அண்ணனுக்கும் அடி விழுந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று சமாதானம் ஆகியிருக்கிறார்கள்.
அதன் பிறகு விஸ்மயாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை. தொலைபேசியில் அம்மாவுடன் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு 19 ஜூன் தந்தையர் தினத்தில் விஸ்மயா தன் தந்தைக்கு வாழ்த்து சொன்னது பிரச்சினை ஆகியிருக்கிறது.
இதற்கிடையில் தான் பட்ட காயங்களையும் கஷ்டங்களையும் அம்மாவிடம் அடிக்கடி விஸ்மயா சொல்லவும் செய்திருக்கிறார். ஜூன் 19 அன்றே அவரது சடலம் குளியலறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 வயது பெண் வரதட்சணை கொடுமையால் மரணமான சம்பவம் கேரளத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது.