வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் வீட்டையே விஷ வாயு கூடமாக மாற்றி, தாய் மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், யூடியூப் பார்த்து, மாத கணக்கில் அவர்கள் திட்டமிட்ட பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெற்கு டில்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு வீட்டின் கதவு கடந்த 21ம் தேதி பல மணி நேரம் திறக்கப்படவில்லை. வீட்டின் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன. அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விரைந்து வந்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். கதவுக்கு அருகே சில காகிதங்கள் கிடந்தன.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/gallerye_184526760_3037249.jpg)
அதில் கூறப்பட்டிருந்ததாவது: நாங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளோம். இந்த வீடு முழுக்க ‘கார்பன் மோனாக்சைடு’ விஷவாயு பரவி உள்ளது; இது தீ பிடிக்கக் கூடியது. அதனால் கதவை திறந்ததும் உள்ளே வர வேண்டாம். ஜன்னலை திறந்து விடுங்கள். உள்ளே நெருப்பு பற்ற வைக்க வேண்டாம். மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டாம். உள்ளே இருந்து வரும் நச்சு புகையை சுவாசிக்க வேண்டாம். இவ்வாறு அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதைப்படித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தேவையான முன்னேற்பாடுகளுடன் வீட்டுக்குள் சென்றனர். அங்கு ஒரு அறையில் உள்ள கட்டிலில் 55 வயது பெண், 25 வயதுடைய இரண்டு பெண்கள், இறந்து கிடந்தனர். கட்டிலுக்கு அருகில் கரி எரிக்கப்பட்டு, அதிலிருந்து புகை வெளி வந்து கொண்டிருந்தது. சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டரும் திறக்கப்பட்டிருந்தது. நிலக்கரி புகை மற்றும் சமையல் காஸ் கலந்து, கார்பன் மோனாக்சைடு என்ற விஷ வாயுவை ஏற்படுத்தி, அதை சுவாசித்து, அவர்கள் தற்கொலை செய்தது தெரிந்தது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/gallerye_184534727_3037249.jpg)
மேலும், விஷவாயு வெளியே போகக் கூடாது என்பதற்காக வீட்டு கதவுகள், ஜன்னல் கதவுகளை பாலித்தீன் கவர்களை வைத்து மூடியுள்ளதும் தெரிந்தது. மூன்று பெண்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலை செய்து கொண்டது, மஞ்சு, 55, அவரது மகள்கள் அன்ஷிகா, 30, அங்கூ, 26, ஆகியோர் என தெரிந்தது. மஞ்சுவின் கணவர் உமேஷ் ஸ்ரீவத்சவா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொரோனாவால் இறந்துவிட்டார். இதன்பின், மஞ்சு மற்றும் இரு மகள்களும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தினரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதும், விசாரணையில் தெரிந்தது.
மூவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தாய், மகள்கள் மூவரும் தற்கொலை செய்வது தொடர்பாக பல மாதங்கள் யூடியூப் பார்த்து திட்டமிட்டுள்ளனர். யாரும் தங்களை காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக கடினமான தற்கொலை முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். வீட்டில் இருந்த 2 மொபைல் மற்றும் 9 தற்கொலை கடிதங்கள் கைபற்றப்பட்டுள்ளன. அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் டில்லியை உலுக்கி உள்ளது.
Advertisement