வேலூர் மாவட்டம், சேர்க்காடு கிராமத்திலிருக்கிறது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இதன் அருகிலுள்ள கூட்ரோடு பகுதியில், ‘இந்துமதி பாண்டு’ என்ற பெயரில் அனில்குமார் என்பவர் நகை அடகுக்கடை நடத்திவருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இன்று காலை, கடையை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடகுக்கடைக்கு அருகிலுள்ள ஜூஸ் கடையின் பின்பக்கச் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பக்கவாட்டுச் சுவரையும் துளையிட்டு அடகு கடைக்குள் புகுந்திருக்கிறார்கள். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 750 கிராம் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கடை உரிமையாளர் அனில்குமார் தெரிவிக்கிறார்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் கொள்ளைக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால், மாட்டிகொள்ளாமல் இருப்பதற்காக, புத்திசாலித்தனமாக சிசிடிவி-யின் ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கொள்ளை நடந்த கடையை வேலூர் ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி, காட்பாடி டி.எஸ்.பி பழனி தலைமையிலான போலீஸார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மேலும் சில சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்துவருகிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.