2022 ஐ.பி.எல்:குஜராத், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

2022 ஐ.பி.எல் போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணியை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று (24) களமிறங்குகின்றன.

15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் 5 முதல் 10 இடங்களை பெற்றன.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (24) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோல்வி அடையும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உண்டு. அதாவது அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். அந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2 ஆவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.