2022.05.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
01. இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்காக குறுகியகால கடன்களைப் பெற்றுக் கொள்ளல்
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நிலைமையால் எமது நாட்டுக்குத் தேவையான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்புடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகியகாலக் கடன் வசதியும், இந்திய அரச வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் பெற்றுக்கொள்வதற்காக தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொண்டு தேவையான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. பெற்றோலியப் பொருட்களின் விற்பனை விலையை தீர்மானிப்பதற்காக எரிபொருள் விலைப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தல்
பெற்றோலியப் பொருட்களின் உள்ளூர் விலையைத் தீர்மானிப்பதற்காக வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து செலவினங்களின் கூறுகளைக் குறித்துக் காட்டும் வகையில் விஞ்ஞான ரீதியான பொறிமுறையொன்றின் அடிப்படையில் பெற்றோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறான பொறிமுறையின் மூலம் பாவனையாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் முக்கிய ஆறு (06) செலவினக் கூறுகள் தொடர்பாகக் கவனம் செலுத்தி மாதாந்தம் பெற்றோலியப் பொருட்களின் விற்பனை விலையைத் தீர்மானிப்பதற்கு இயலுமான வகையில் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் தலைமையில் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பொறிமுறைக்கமைய மாதாந்தம் பெற்றோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிப்பதற்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் கொரிய குடியரசுக்கு பணியாளர்களை அனுப்புதல் மற்றும் பொறுப்பேற்றல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடித்தல்
தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் கொரிய குடியரசுக்கு பணியாளர்களை அனுப்புதல் மற்றும் பொறுப்பேற்றல் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையருக்கு தென்கொரியாவில் 04 வருடங்கள் மற்றும் 10 மாதங்களை வரையான காலத்திற்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், பணியாளர்களின் செயலாற்றுகையின் அடிப்படையில் குறித்த காலப்பகுதியை மேலும் நீடித்துக் கொள்வதற்கான வாய்ப்புண்டு. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியதுடன், இதற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், மேலும் 02 வருடங்கள் அல்லது கொரிய குடியரசு உடன்பாடு தெரிவிக்கின்ற காலப்பகுதிக்கு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக தொழில்; மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கை அரசின் வெளிநாட்டு படுகடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நிதியியல் மதியுரைஞர் மற்றும் சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகைக் கோரல்
இலங்கை அரசின் வெளிநாட்டு படுகடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நிதியியல் மதியுரைஞர் சேவை மற்றும் சர்வதேச சட்ட மதியுரைஞர்; சேவைக்கான பெறுகைக் கோரலுக்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக கோரப்பட்ட விலைமனுக்களுக்கமைய, நிதியியல் மதியுரைஞர் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக 28 முன்மொழிவுகளும், சட்ட மதியுரைஞர் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக 23 முன்மொழிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த இரண்டு பெறுகைகளுக்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வகையில் குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• சர்வதேச நிதியியல் மதியுரைஞர் சேவைக்கான பெறுகை பிரான்ஸ் M/s Lazard நிறுவனத்திற்கு வழங்குதல்
• சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகை பிரான்ஸ் M/s Clifford Chance LLP நிறுவனத்திற்கு வழங்குதல்
05. அமைச்சரவை பேச்சாளர்களை பெயரிடல்
இணை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்களாக செயற்படுவதற்காக கீழ்க்காணும் அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது :
• கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன அவர்கள்,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
• கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள்
விவசாய அமைச்சர்
வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்
• கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்கள்
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
• கௌரவ மனூஷ நாணயக்கார அவர்கள்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்