2024 தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்: ராகுல் காந்தி தலைமையில் குழு!

காங்கிரஸ்
தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் கடந்த 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி,
ராகுல் காந்தி
, பிரியங்கா வதேரா உட்பட சுமார் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். கட்சியை பலப்படுத்துவது, தேர்தல் வியூகங்கள், உட்கட்டமைப்பு விஷயங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவு நாளில் பேசிய ராகுல் காந்தி, மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் முதல் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரைகள் மேற்கொள்ளும் என அறிவித்தார்.

இந்த கூட்டத்துக்கு பின் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பல சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதாவது, உதய்பூரில் நடைபெற்ற நவ் சங்கல்ப் சிந்தனை பிரகடனம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஆட்சி மன்றக் குழுவை அமைக்கும் திட்டத்தை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்து விட்டது. அதற்குபதில், முடிவுகள் எடுப்பதில்காங்கிரஸ் தலைவருக்கு உதவ காங்கிரஸ் செயற்குழுவுக்குள் சிறு குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு அரசியல் விவகாரங்கள் குழு, task force எனும் பணிக்குழு, பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் மத்திய திட்டமிடல் குழு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். அதன்படி, காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக் விஜய் சிங், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், ஜித்தேந்திர சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் குழு
காங்கிரஸ் குழு

அதேபோல், task force எனும் பணிக்குழுவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, தேர்தல் உத்தியாளர்
சுனில் கனுகோலு
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தனது விரிவான விளக்கத்தை அளித்தார். அதன்பிறகு அவர் அக்கட்சியில் இணையவுள்ளார் எனவும், 2024 தேர்தலுக்கு அக்கட்சியின் ஆலோசகராக அவர் செயல்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், காங்கிரஸ் கட்சியில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்த பின்னணியில் 2024 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழுவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.