இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி குறித்தான அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகார மையமாக விளங்கிவருகிறது AICTE என்றழைக்கப்படும் All India Council for Technical Education. இந்த அமைப்பு பொறியியல், மேலாண்மை முதலிய படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பின்படி, இளநிலை பொறியியல் படிப்புகளான B.E, B.Tech மற்றும் இளநிலை கட்டடக்கலை படிப்பான B.Arch ஆகியவற்றிருக்கு ஓராண்டு குறைந்தபட்சக் கட்டணம் ரூ.76,600, அதிகபட்ச தொகை ரூ.1,89,800. இப்படிப்புகளுக்கான முன்பிருந்த தொகை ரூ.55 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வரை. இதேபடிப்புகளின் முதுநிலை கோர்ஸ்களான M.E, M.Tech மற்றும் M.Arch ஆகியற்றிற்குக் குறைந்தபட்சத் தொகை ரூ.1,41,200 ஆகவும் அதிகபட்ச தொகை ரூ. 3,04,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல மூன்று ஆண்டு MCA படிப்பிற்கு குறைந்தபட்சம் ரூ.88,500 அதிகபட்ச தொகை ரூ.1,94,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதுகலை மேலாண்மை படிப்பான MBA-விற்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள கட்டணம் ரூ.85,000 (குறைந்தபட்சம்) முதல் ரூ.1,95,200 (அதிகபட்சம்) வரை. இறுதியாக டிப்ளமோ படிப்புகளுக்கான ஓராண்டிற்கான கட்டணம் தொகை ரூ.67,990 அதிகபட்ச தொகை ரூ.1,40,900. மாற்றப்பட்டுள்ள இந்த புதிய கட்டணங்கள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் இருந்தே செயல்படுத்தப்படும் எனத்தெரிகிறது.
உயர்த்தப்பட்டுள்ள இந்தக் கல்விக் கட்டணம் குறைவான மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி குறைக்கப்படக்கூடாது என்றும் கல்வி தரத்தை உயர்த்துவதே கல்வி நிறுவனங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளது AICTE. இதுமட்டுமல்லாமல் 7-வது ஊதியக்குழுவின் அறிக்கைபடி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் ஆகியோருக்கான சம்பளத்தொகையையும் அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது AICTE. இது குறித்து கல்வியாளர் ராஜராஜனிடம் பேசினோம்
“ 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதேபோல கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதற்கான அதிகபட்ச தொகை மட்டுமே சொல்லப்பட்டது. குறைந்தபட்ச கட்டணத் தொகை என்று எதுவும் சொல்லப்படவில்லை. கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பை உயர்த்தவே தற்போதைய கட்டண உயர்விற்கான காரணமாக சொல்லபடுகிறது. ஆனால் infrastructure எனப்படும் இந்த கட்டமைப்பு வசதிகள் கல்லூரிகளின் மூலதன முதலீட்டின் கீழ் வரும். இந்த capital investment-ஐ பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து வாங்குவது தவறு. இதேபோல பேராசிரியர்களுக்கான சம்பளம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஆனால் இதையும் கல்விக் கட்டணத்தில் இருந்து வாங்கக்கூடாது. அப்போது இதற்கான பணம் எங்கிருந்துதான் பெறுவது என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு தனியார் கல்லூரியை எடுத்துக்கொள்ளுங்கள். இத்தனை ஆண்டு காலம் அக்கல்லூரி நடத்தப்பட்டு வருவதால் அதன் கட்டமைப்பு நிச்சயம் உயர்ந்திருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புதிய வசதிகள் கொண்டுவரவேண்டுமென்றாலும் அதை கல்விக் கட்டணத்தை உயர்த்திதான் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
கல்வி ஒரு வியாபாரம் கிடையாது. அதில் marginal revenue என்பது குறைவாகத்தான் இருக்கும். அது போதும் என்று நினைப்பவர்கள் தான் கல்வியை சேவையாக வழங்க முடியும். நம் நாட்டை ‘welfare state’ என்று சொல்லுகிறோம். ஆனால் இனி பணம் கொடுத்தால்தான் கல்வி கிடைக்கும் என்ற நிலைமைக்கு இப்பாதை இட்டு செல்லும். முன்பிருந்த கட்டணத்தையே நிறைய பேரால் காட்டமுடியாத நிலையில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும்.
கல்விக்காக நம் அரசு இன்னும் அதிக தொகையை ஒதுக்க வேண்டும். அது அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு கிடையாது. எதிர்கால மனித வளத்திற்கான முதலீடே அது. இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக போடப்படும் பணமாகத்தான் அதைப் பார்க்க வேண்டும். எனவே கல்வி கட்டணத்தை உயர்த்தாமல் கட்டமைப்பை உயர்த்திட அரசே முன்வரவேண்டும். மேலும் உயர்த்தப்பட்டுள்ள இக்கட்டணத்தை தனியார் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே வாங்கி வருவதால் இந்த உயர்வு அவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் வண்ணம் உள்ளது. அதுவும் டிப்ளமோ படிப்பின் கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயாத்தியதெல்லாம் மிகவும் தவறான ஒன்று ” இவ்வாறு கூறினார் அவர்.