திருமலை: அமெரிக்காவில் நடந்த திருமணத்தை ஆந்திராவில் உள்ள உலகின் மிகப்பெரிய 3வது சினிமா தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டது. மணமக்களின் உறவினர்கள் இதை பார்த்து வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர்கள் பர்வதா-ஜோதி தம்பதி. இவர்களின் மகன் ரோஹித் (23), அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கும் திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டையை சேர்ந்த சீனிவாசா-சுனிதா தம்பதியின் மகள் ரிஷிதா (21) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் கடந்த 22ம்தேதி அமெரிக்காவில் நடந்தது. இதில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்த விரும்பிய உறவினர்கள் அமெரிக்காவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தனர். கிடைக்காததால் திருமணத்தில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.இதனால் நாயுடுபேட்டையில் உள்ள உலகின் 3வது மிகப்பெரிய திரையரங்கமாக கருதப்படும் வி.செல்லுலாயிட் நிறுவனத்தின் விஏபிக் திரையரங்கத்தில் திருமண நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக தியேட்டரை வாடகைக்கு எடுத்தனர். இதைத்தொடர்ந்து திருமண விழா அனைத்து நிகழ்ச்சிகளும் அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திரையரங்கில் பார்த்த உறவினர்கள், மணமக்களை வாழ்த்தினர். இந்த காட்சிகள் நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த திருமண நிகழ்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.