அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கப்பள்ளியொன்றில், 18 வயது இளைஞன் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெளியான தகவலில், டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியாவுக்கு மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளியினுள், 18 வயது இளைஞர் ஒருவர் காலை 11 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞன் பள்ளியினுள் கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதலில் 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பள்ளியில் மேலும் குழந்தைகளைக் காக்கும் பொருட்டு, அந்த இளைஞர் மீது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த இளைஞரும் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இச்சம்வபத்தில் பெரியவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் பதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கோடி பறக்க விடப்பட்டது. மேலும், அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் பெரிய அளவில் 215 துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பள்ளிகளில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு இதே போன்று அமெரிக்காவில், கனெக்டிகட் மாகாணத்தில் நடந்த சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 குழந்தைகள் மற்றும் 6 ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.