அமெரிக்காவின்
டெக்சாஸ்
மாகாணத்தில் சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில்
Robb Elementary School
எனும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7 முதல் 10 வயதிலான குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் இன்று அதிகாலை
துப்பாக்கிச் சூடு
சம்பவம் நடைபெற்றது. இதில் சிக்கி 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முன்னதாக, 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 19 குழந்தைகள், ஒரு ஆசிரியர், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், தற்போதைய டெக்சாஸ் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடியை பாராட்டிய ஜோ பைடன் – என்ன காரணம்?
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது கட்டிடங்களில் அமெரிக்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன